குடும்ப தகராறில் கோவில் பூசாரி வெட்டிக்கொலை- அண்ணன் மகன் கைது
1 min read
Temple priest hacked to death in family dispute – nephew arrested
28.4.2026
திருநெல்வேலி மாவட்டம், மானூரை அடுத்த பள்ளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கணபதி (வயது 60), அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். கணபதிக்கும், அவரது அண்ணன் மகனான முருகன்(35) என்பவருக்கும் இடையே குடும்ப விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்தன.
இந்த நிலையில் சம்பவத்தன்று பகலில் கணபதி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகனுக்கும், கணபதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற முருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது சித்தாப்பா என்றும் பாராமல் கணபதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கணபதி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்த பின்னர் முருகன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார், கணபதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தப்பியோடிய முருகனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே அந்த பகுதியில் பதுங்கியிருந்த முருகனைப் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தால் பள்ளிக்கோட்டை கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால், அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.