பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை
1 min read
6 people sentenced to death in BJP leader’s murder case
1.5.2026
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி பகுதியை சேர்ந்த வாலிபர் மாருதி. முன்விரோதம் காரணமாக கடந்த 2025-ம் ஆண்டு இவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தது. இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியாக அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க. இளைஞர் அணி தலைவரான வெங்கடேஷ் (வயது 37) இருந்தார். மாருதியை கொலை செய்தவர்களுக்கு சட்ட ரீதியாக தண்டனை பெற்று கொடுப்பேன் என்றும் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாருதி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வெங்கடேஷ் உயிருடன் இருந்தால், கண்டிப்பாக கோர்ட்டில் நமக்கு எதிராக சாட்சி அளிப்பார்; இதனால் நமக்கு தண்டனை கிடைப்பது உறுதி. எனவே அவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்.
அதன்படி வெங்கடேசின் நடவடிக்கைகளை மர்ம நபர்கள் கண்காணித்து வந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி வெங்கடேஷ் தனது மோட்டார் சைக்கிளில் ராணா பிரதாப்சிங் சர்க்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று, அவர் மீது காரை மோதியது. இதில் கீழே விழுந்த வெங்கடேசை பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இதனால் வெங்கடேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொலை தொடர்பாக ரவி, மைலாரி, தன்ராஜ், பீமா, சலீம் மற்றும் கங்காதர் ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கொப்பல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சதானந்தநாயக் நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார். அப்போது, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 6 பேருக்கும் தூக்கு தண் டனை வழங்குவதாகவும், தலா ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.