திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய்; ஒரு நபர் குழு அமைப்பு
1 min read
Ghee mixed in Tirupati Laddu Prasad; One-person team formation
8.5.2026
ஆந்திராவில் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தது. கலப்பட நெய் விவகாரத்தை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் கலப்பட நெய் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ்குமார் தலைமையிலான ஒரு நபர் குழுவை நியமித்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. அந்த ஒருநபர் குழு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது.
அதில், திருப்பதி ஏழுமலையானுக்கு பயன்படுத்தப்பட்ட நெய் மாதிரிகள் தரநிலைக்கு ஏற்ப இல்லாததையும், ஆய்வக பரிசோதனைகளில் நெய்யில் கலப்படம் செய்திருந்ததையும் கண்டறிந்தது. நெய் கொள்முதல் மற்றும் வினியோக முறைகளில் பல குறைபாடுகள் இருப்பதாக ஒரு நபர் குழு சுட்டிக்காட்டியது. இந்த பிரச்சனைக்கு காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஒரு நபர் குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் நெய் கொள்முதல் முறையை வெளிப்படையாக மாற்றுதல், கட்டாயம் ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளுதல், தர கட்டுப்பாட்டு அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் தேவையெனில் தனியாக நெய் தயாரிப்பு யூனிட் அமைத்தல் போன்ற பரிந்துரைகளையும் தனிநபர் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் ஜி.சாய்பிரசாத் வெளியிட்டுள்ள அரசாணையில் ‘ஒரு நபர் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த அரசு, அதன் பரிந்துரைகளை அமல்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் ஒரு முறையான கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் எனக் கருதுகிறது.
அதன்படி, அரசு ஒரு உயர்மட்ட குழுவை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையிலான இந்த புதிய குழுவில், டி.ஜி.பி. உறுப்பினராகவும், சட்ட செயலாளர் உறுப்பினர் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார்கள். ஒருநபர் குழுவின் கண்டறிதல்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட நிர்வாக ரீதியான, ஒழுங்குமுறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதோடு, அவற்றை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவுடன் கூடிய முன்னுரிமைத் திட்டத்தையும் முன்மொழிய இக்குழு பணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசின் முடிவுகளை சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான கண்காணிப்பு முறையை பரிந்துரைத்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.