அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்க கோரி தற்காலிக சபாநாயகரிடம் கடிதம்
1 min read
AIADMK Letter appointing S.P. Velumani as Legislative Committee Chairman
11.5.2026
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்குள் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எடப்பாடியின் தவறான கொள்கை முடிவுகளால்தான் அ.தி.மு.க. தோல்வியடைவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. அதோடு, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் எடப்பாடியும், த.வெ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எம்.எல்.ஏ.வாக பதவியேற்பதற்கு கூட அ.தி.மு.க.வினர் 2 அணிகளாக சட்டமன்றத்திற்கு வந்தது பேசுபொருளானது. அ.தி.மு.க.வில் உள்ள 47 எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் வசம் உள்ளனர். இதனிடையே, 17 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் சட்டமன்ற குழு தலைவராக தொடர வேண்டும் என சட்டமன்ற செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் இன்று காலை மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியை அ.தி.மு.க சட்டமன்ற குழு தலைவராக நியமிக்க கோரி சி.வி.சண்முகம் தலைமையில் சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகரை சந்தித்து கடிதம் வழங்கியுள்ளனர். மேலும், சட்டமன்ற அ.தி.மு.க. துணை தலைவராக சி.வி.சண்முகத்தை நியமிக்கவும், கொறடாவாக சி.விஜயபாஸ்கரை நியமிக்கவும் கோரி அவர்கள் கடிதம் வழங்கியுள்ளனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், சற்று நேரத்தில் அனைத்தும் தெரியவரும் என தெரிவித்தார்.