ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ராஜீவ் ஆய்வு
1 min read
Minister Rajiv inspects Alankulam Government Hospital
8.6.2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருகை தந்த தமிழக சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வி.கே.ராஜீவை தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் டி.பி.வி.வி. விபின் சக்ரவர்த்தி வரவேற்றார்.
தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான வி.கே.ராஜீவ் தென்காசி மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினார்.
பின்னர், ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் மருத்துவமனை தலைமை மருத்துவர் அருண் பிரசாத் தவெக தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்ரவர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர், அமைச்சர் ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராசர் சிலைக்கு மாலையணிவித்தார் .
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட எல்லையான கீழப்பாவூரில் டி.பி.வி.வி. விபின் சக்ரவர்த்தி தலைமையில் தவெகவினர் அமைச்சர் ராஜீவுக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.
மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் திட்டப்பணிகள் குறித்தும், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், இலஞ்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நடைபெற்று வரும் புறவழிச்சாலை திட்டப் பணிகள் குறித்தும், புளியரை தமிழ்நாடு. கேரளா எல்லை காவல் சோதனைச் சாவடி வழியாக செல்லும் வழித்தடத்தில் கனிமவள வாகனங்களுக்கான ஒற்றைப்படை, இரட்டைப்படை வரிசை முறை பின்பற்றப்பட்டு வருவது குறித்தும், புளியரை அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்தும், ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் நுழைவு வாயிலில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழலை வளப்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் (தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர்) திரு.வி.கே.ராஜீவ் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர்
சீ.ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, தென்காசி சார் ஆட்சியர் வைஷ்ணவி பால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருகாளிமுத்து, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.