பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு
1 min read
Praveen Chakravarthy elected unopposed as a member of the Rajya Sabha
8.6.2026
தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன.
தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கடந்த மே 7-ந்தேதி ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி வரை இருந்த நிலையில், முன்கூட்டியே ராஜினாமா செய்ததால் அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி உட்பட 14 பேர் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தவிர மற்ற அனைவரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். அவர்களை ஆதரித்து எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழியாததால், அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே, காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாகிறார்.