June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அத்திரிமலை கோவிலுக்கு சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை

1 min read

Request to provide road facilities to Athrimala temple

15.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கே அத்ரிமலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற கோரக்கநாதர் திருக்கோவில் அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்ரி பரமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் பொதிகை மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. தரைமட்டதிலிருந்து சுமார் 1000 அடி உயரத்திலிருக்கும் உயரத்தில் அருள்மிகு கோரக்கநாதர் திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீ அனுசுயா பரமேஸ்வரி சமேத அருள்மிகு அத்ரி பரமேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவில்
பல்லாயிரமாண்டு பழமை வாய்ந்த இத் திருக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் இங்கே தவம் புரிந்ததாக வரலாறு உள்ளது. கோரக்க சித்தரின் குருவாகிய அத்திரி மகரிஷி இங்கு தனது மனைவி அனுசுயாவுடன் தவம் புரிந்து சிவனை தரிசித்ததாலும் அனுசுயா பரமேஸ்வரி சமேத அத்திரி பரமேஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்படுகிறது.

தமிழ் வருட பிறப்பு, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், பவுர்ணமி, அமாவாசை, கடைசி வெள்ளி, மற்றும் பிரதோஷம் போன்ற விசேஷமான நாட்களில் திருத்தலத்திற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.

இவ்வாறு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் தரைமட்டதிலிருந்து சுமார் 1000 அடி உயரத்திலிருக்கும் கோயிலை சென்றடைய வழித்தடம் கரடுமுரடான ஒற்றையடி பாதையாக இருப்பதால் பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட முதியவர்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பு பக்தர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். கடனாநதி அணையில் நீர்மட்டம் அதிகமாக இருக்கும்போது பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அவதிப்படுகின்றனர். விசேஷ நாட்களில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது இந்த ஒழுங்கற்ற ஒற்றையடி பாதையில் அவசர சிகிச்சைக்காகவோ வேறு ஏதேனும் அவசர காரணத்திற்காகவோ மலையடிவாரத்திற்கு வருவதற்கு சாத்தியமில்லை. கோவில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாததால் மாலை 4 மணிக்கு மேல் பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது.

மேலும், விஷேச நாட்களில் கோவிலுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் உள்ளது. எனவே, பக்தர்களின் நலனையும் பாதுகாப்பையும் மனதில் கொண்டு பக்தர்கள் வாகனத்தில் வந்து செல்லவும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்கள் வந்து செல்ல வசதியாகவும் சாலை மற்றும் விளக்கு வசதிகள் செய்து தரும்படிக்கு பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர்.

இது குறித்து சிவசைலம் பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் சங்கரபாண்டி கூறுகையில், தற்பொழுது அத்திரிமலை கோரக்கநாதர் திருக்கோவிலின் புகழ் உலக அளவில் வேகமாக பரவி இங்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பக்தர்கள் எளிதாக வந்து செல்ல சாலை வசதி, கூடுதல் சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமெனவும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பக்தர்கள் விசேஷ நாட்களில் அதிகம் வருவதால் கூடுதலாக பேருந்து வசதி செய்து தரவேண்டுமெனவும் பக்தர்களையும் கோயிலையும் பாதுகாக்கும் பொருட்டு சோலார் இணைப்புடன் செயல்படும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும் பூஜை செய்வதில் தனிநபர்களின் தலையீடு இருப்பதாகவும் இதை தடுக்கும் விதமாக நிரந்தர பூசாரியை இந்து அறநிலையத்துறை நியமிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசின் ஆணைப்படி நித்திய பூஜை செய்வதற்கு இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *