கடனாநதி அணையின் மராமத்து பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
1 min read
Request to complete the repair work of the Kadananadi Dam as soon as possible
25.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் சம்பன்குளத்தை அடுத்துள்ள கடனாநதி அணையின் மராமத்து பணிகள் நிறைவடையாமல் இருப்பது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சம்பன்குளம் கிராமத்தில் பொதிகை மலையடிவாரத்தில் அமைந்துள்ள கடனாநதி அணை மொத்தம் 85 அடி நீர் கொள்ளளவு கொண்ட அணையாகும். இந்த அணையின் நீரிருப்பை நம்பி முக்கூடல் வரையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த அணையானது தற்போது ஒரு சொட்டு கூட நீரின்றி வறண்ட நிலையில் உள்ளது. அணையில் உள்ள ஷட்டர்கள் மற்றும் அணையின் பக்கவாட்டு சுவர்களின் விரிசல்களால் ஏற்பட்ட நீர் கசிவினை சரிசெய்யும் பொருட்டு அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழலில் இதுவரை அணையின் மராமத்து பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடையம் ஒன்றிய செயலாளர் இரா. முத்துராஜன் கூறியதாவது,
விரைவில் தொடங்க இருக்கும் சம்பா சாகுபடிக்காக அரசபத்து கால்வாய் பாசன பகுதி, ஆழ்வார்குறிச்சி தென்கால் பாசன பகுதி, காங்கேயம் கால், குருந்துடையார் குளம், விளாத்திகுளம், சம்பன்குளம் ஆகிய பாசன பகுதிளிலுள்ள சுமார் 8500 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடும் விவசாயிகள் தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில்
கடனாநதி அணையின் மராமத்து பணிகள் நிறைவடையாமல் இருப்பது கவலையளிக்கிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் அணையின் மராமத்து பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இப்பகுதி விவசாயிகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என கூறினார்.
-ஜோசப், நிருபர்.