June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு – ரிசர்வ் வங்கி தகவல்

1 min read


India’s foreign exchange reserves rise – Reserve Bank information

16.5.2026
மேற்கு ஆசியாவில் நீடிக்கும் போர் பதற்றம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் வினியோக பாதிப்பால் பல நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த பதற்றம் இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நாட்டின் அன்னிய செலாவணியிலும் பெரும் வீழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் போர் தொடங்குவதற்கு முந்தைய நாளான பிப்ரவரி 27-ந்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 728.494 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.69 லட்சம் கோடி) இருந்தது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும். ஆனால் போர் தொடங்கியதை தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியடைந்தது.
எனவே அதை நேர் செய்வதற்காக ரிசர்வ் வங்கி டாலரை அதிக அளவில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் அன்னிய செலாவணி கையிருப்பு மெல்ல மெல்ல கரைந்து வந்தது. அதன்படி மே 1-ந்தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 690.693 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
எனினும் அடுத்த வாரத்தில் இது சற்றே உயர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. அதன்படி மே 8-ந்தேதியுடன் நிறைவடைந்த அறிக்கை வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி 6.295 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 696.988 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.66 லட்சம் கோடி) இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதைப்போல தங்கம் கையிருப்பும் அந்த வார நிலவரப்படி 5.637 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரித்து 120.853 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.11 லட்சம் கோடி) அளவுக்கு இருப்பதாக ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான இந்தியாவின் கையிருப்பும், 12 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 4.875 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *