இறக்குமதிக்கு கட்டுப்பாட்டால் வெள்ளி விலை உயரும்- நிபுணர்கள் கருத்து
1 min read
Silver prices will rise due to import restrictions – experts
17/5/2026
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி (அடிப்படை சுங்கவரி 10 சதவீதம், வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி 5 சதவீதம் சேர்த்து) மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த 9 சதவீத வரி உயர்வு கடந்த 13-ந்தேதி முதலே அமலுக்கு வந்ததன் காரணத்தினால், தங்கம், வெள்ளி மீதான விலையிலும் தாக்கம் எதிரொலித்தது.
தற்போது நிலவிவரும் அமெரிக்க-ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் நீரிணை பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிகப்படியான டாலர்களை செல விட வேண்டியுள்ளது. இந்தியா தனது எரிசக்தி மற்றும் தங்கத் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. அதில் எரிசக்தி யில் வரக்கூடிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.
அதனை இறக்குமதி செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டியிருப்பதால், அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதனை ஈடுகட்ட அத்தியாவசியமற்ற இறக்குமதி என கருதப்படும் தங்கம், வெள்ளியை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு கொண்டு வந்த முயற்சிதான், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளி இறக்குமதி மீதான வரியை இரண்டு மடங்கு உயர்த்திய சில நாட்களிலேயே சில குறிப்பிட்ட வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 99.9 சதவீத தூய்மையான வெள்ளிக்கட்டிகள் இறக்குமதிக்கு தடையற்ற பிரிவில் இருந்தது. இது கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. குறிப்பிடத்தக்க பிற வெள்ளியும் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த பிரிவுக்கு வெள்ளிக்கட்டிகள் மாற்றப்பட்டு உள்ளதால், வெள்ளி இறக்குமதிக்கு அரசின் முறையான உரிமம் அல்லது அனுமதி கட்டாயம் பெற வேண்டும். உள்நாட்டுத் தேவையை உன்னிப்பாகக் கவனித்து, தேவைப்பட்டால் மட்டுமே அரசு இந்த உரிமத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உள்நாட்டில் வெள்ளி விலை உயர்வதுடன், நகை மற்றும் மின்னணு துறைகளில் வெள்ளி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர். தங்கத்தை விட வெள்ளியின் இறக்குமதி அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மட்டும் வெள்ளியின் இறக்குமதி மதிப்பில் இரண்டரை மடங்கு உயர்ந்து, சுமார் 12.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அளவின் அடிப்படையில் பார்த்தால், 42% உயர்ந்து 7,335 டன்களாக மாறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே போன்ற அசுர வளர்ச்சி தொடர்ந்ததால் மத்திய அரசு இந்த கட்டுப்பாடை விதித்துள்ளது.