கேரளாவில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்- முதல்-மந்திரி சதீசன்
1 min read
Free bus travel for women in Kerala – Chief Minister Satheesan
18/5/2026
கேரளாவில் முதல்-மந்திரியாக சதீசன் பதவி ஏற்றார். திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
அவர் பதவியேற்றதும், முதல்முறையாக கூடிய மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பஸ் பயணம், முதியோர் நலனிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு துறை, ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் உயர்வு ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.
2023-ம் ஆண்டில் நவ கேரள யாத்திரையின்போது, இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைக்கவும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆஷா பணியாளர்கள் சம்பளம் உயர்த்தி வழங்க கோரி, கேரள தலைமை செயலகத்திற்கு முன்பு நீண்டகாலத்திற்கு போராடி வந்தனர். அவர்களுக்கு, மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என முன்பே வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி ஆஷா பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் மாதத்திற்கு ரூ.3 ஆயிரம் உயர்த்தி வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோன்று அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், பள்ளி சமையல் பணியாளர்கள், ஆயாக்கள் உள்ளிட்டோருக்கு மாதம் ரூ.1,000 சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.