கடையம் அருகே சமையல் எரிவாயு கசிந்து தீவிபத்து
1 min read
Fire breaks out due to cooking gas leak near shop
20.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுர மடம் (சம்பன்குளம்) அருகேயுள்ள அழகப்பபுரத்தில் சடங்கு வீட்டில் சமையல் செய்வதற்காக வீட்டின் முன்புறம் அடுப்பு வைத்து சமைக்க முயற்சித்த போது சிலிண்டரிலிருந்து ஏற்பட்ட சமையல் எரிவாயு கசிவால் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீட்டின் முன்புறம் நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்த பந்தல் எரிந்து சேதமடைந்தது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் போராடி தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக பொருட்களுக்கோ மனிதர்களுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அதிகாரி கமலக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சமையல் எரிவாயு சிலிண்டரிலிருந்து கசிந்து கொண்டிருந்ததை கண்டறிந்து பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி சமையல் எரிவாயு சிலிண்டரை சிறிது நேரம் நீருக்குள் மூழ்கி இருக்கும்படி செய்து எரிவாயு கசிவை சரிசெய்தனர்.
பின்னர், அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அதிகாரி கமலக்குமார் அங்கிருந்தவர்களுக்கு இதுபோன்று தீவிபத்து ஏற்படும்போது எப்படி சமயோசிதமாக செயல்பட்டு விபத்தை தடுத்து உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டுமென அறிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார்.