மேகதாது அணைக்கு அனுமதி கோரி பிரதமரிடம் டி.கே.சிவக்குமார் நேரில் கோரிக்கை
1 min read
D.K. Shivakumar personally requests Prime Minister Modi for approval for the Mekedatu dam
12.6.2026
டெல்லியில் நேற்று நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் குழு கூட்டத்தில் இந்தியாவின் 28 மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொண்டனர். கடந்த கால கூட்டங்களில் சில முதல்-மந்திரிகள் பங்கேற்காமல் இருந்தனர். கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போன்றோர் புறக்கணித்தனர்.
ஆனால் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்ட னர். கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கலந்து கொண்டார். யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை கவர்னர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் தங்களது மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இந்த நிலையில், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடியிடம் அறிக்கை ஒன்றை அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதில், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை அமல்படுத்துகிறோம். இதற்கு மத்திய அரசின் வனம், சுற்றுச் சூழல் துறையின் அனுமதி தேவை. இந்த அனுமதியை விரைவாக வழங்க வேண்டும்.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எந்த தடையும் இல்லாததால், இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதைபோல மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் டி.கே.சிவக்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடமும் மேகதாது திட்டம் குறித்த அறிக்கையையும் சமர்பித்துள்ளார்.