June 24, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்

1 min read

Union Cabinet reshuffle soon.

24.6.2026
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி 3-வது முறையாக பதவி ஏற்றது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. அதன்பிறகு இதுவரை ஒரு முறைகூட மத்திய மந்திரிசபை மாற்றம் நிகழவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய மந்திரி சபையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் நேற்றுமுன்தினம் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் கடந்த 21-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பெயர் மீண்டும் மேல்சபை எம்.பி.க்கு பரிந்துரைக்கப்படவில்லை. இதையடுத்து அவர் தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் மத்திய ரெயில்வே மற்றும் உணவு பதப்படுத்தல் துறை இணை மந்திரியாக உள்ள ரவ்நீத் சிங்கின் மேல்சபை எம்.பி. பதவிக்காலம் நிறைவடைந்து உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி ஹர்ஷ் மல்ஹோத்ரா, டெல்லி பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பா.ஜ.க.வில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக, மத்திய மந்திரிசபையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி, வருகிற 27-ந்தேதி செஷல்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டு உள்ளது. மந்திரிசபை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காகவே ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில், மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில், செயல் திறன்மிக்க மந்திரிகளை நியமிக்கும் வகையில், மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பா.ஜ.க.வில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், இமாச்சல பிரதேசம், குஜராத் ஆகிய 7 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளதால், மத்திய மந்திரிசபையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதுவும், விரைவில் இந்த மாற்றம் நிகழக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பில், ரெயில்வே, நிதி உட்பட 10 முதல் 12 முக்கிய அமைச்சகங்களில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, தற்போதுள்ள பல மந்திரிகளின் பதவிகள் பறிக்கப்படும் எனவும், சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 7 மாநில தேர்தலுக்கு ஏற்ப, மத்திய மந்திரி சபையில் மாற்றம் நிகழக்கூடும் என கூறப்படுகிறது.

தற்போதைய மத்திய மந்திரிசபையில் யார் யார் நீக்கப்படுவார்கள், யார் சேர்க்கப்படுவார்கள் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் யூகங்களாக வெளிவர தொடங்கி உள்ளன. இந்த மந்திரிசபை மாற்றத்தில், முதல் இலக்காக, ரெயில்வே, செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில், ஒரு துறையை மட்டும் அவர் தக்க வைக்கலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில், ‘ஜி 20’ மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியதில் முன்னாள் வெளியுறவு செயலராக இருந்த ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா முக்கிய பங்காற்றினார். இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், சமீபத்தில் மேல்சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். எனவே அவர் மந்திரிசபையில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளில் குளறுபடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனவே, அவரது பதவியும் பறிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வின் தேசிய தலைவராக நிதின் நபின் மிக இளம் வயதில் பதவியேற்றது அக்கட்சியில் தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, மத்திய மந்திரிசபையிலும் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற பா.ஜ.க.வின் கொள்கைப்படி, மந்திரிகள் கட்சி பொறுப்புக்கு செல்லும்போது, அவர்கள் தங்களின் மந்திரி பதவியை விட்டுக்கொடுப்பார்கள். இதன்படி மத்திய மந்திரிகளாக உள்ள பலர் கட்சி பொறுப்புக்கு செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய மந்திரிசபையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க வழிவகை செய்யப்பட உள்ளது.

40 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம் தலைவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் அதிக வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும், 70 வயதுக்கு மேற்பட்ட சில மூத்த மந்திரிகள் நீக்கப்பட்டு, கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த பட்டியலில், மூத்த மந்திரிகளான ராஜ்நாத் சிங், ஹர்தீப்சிங் புரி, கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்புள்ளது.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மத்திய மந்திரிசபையில் அதிக பிரதிநிதித்துவம் கோருகின்றன.
எனவே, கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரும், கேபினட் மந்திரிகளாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மந்திரிசபையில், செயல்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, பலவீனமானவர்கள் நீக்கப்படுவார்கள். பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் வலுவான மந்திரிசபை உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பு பா.ஜ.க. ஆட்சியை வலுப்படுத்தி, 2029-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியை தயார்படுத்தும் மாற்றமாக அமையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *