வேடசந்தூர் அருகே நெல்லை ரவுடி உள்பட 7 பேர் கைது
1 min read
Seven people, including a rowdy from Nellai, arrested near Vedasandur.
5.7.2026
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் சாலையில் சாலையூர் நால்ரோடு அருகே அதிவேகமாக சென்ற ஒரு கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி சேதப்படுத்திவிட்டு, அருகில் நின்றிருந்த இருவரை நோக்கி வேகமாக வந்த போது இருவரும் அங்கிருந்து தாவி குதித்து உயிர் தரப்பினார்கள்.
இதனை அடுத்து உயிர் தப்பியவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து தப்பிச்சென்ற அந்த காரை விரட்டிச் சென்றனர். அப்போது, சுள்ளெறும்பு நால்ரோடு வேகத்தடை அருகே காரின் டயர் வெடித்து கார் நின்றது.
காரின் பின்னால் விரட்டிக்கொண்டு வந்த பொது மக்களிடம் காரில் இருந்து இறங்கியவர்
தன்னிடம் இருந்த நீண்ட வாளை எடுத்து “நான் ஒரு ரவுடி என்னை எதிர்த்தால் வெட்டி சாய்த்துவிடுவேன்” என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து ரகளை ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்துதகவல் கிடைத்ததும் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடியான சுந்தர் என்ற சுத்தமல்லி சுந்தர் (வயது 34) என்பது தெரிய வந்தது.
பின்னர், சுத்தமல்லி சுந்தர் மருத்துவப் பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவர் குடிபோதையில் அரசு மருத்துவரையும், போலீசாரையும் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சுத்தமல்லி சுந்தர் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதில் ரவுடி சுத்தமல்லி சுந்தரின் கூட்டாளிகளான வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாத்தினிபட்டியைச் சேர்ந்த அதிமுக திண்டுக்கல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திக் என்ற சேட்டை கார்த்திக் (வயது 38), ஆத்துமேட்டை சேர்ந்த பப்லு (வயது 20), வேடசந்தூர் நேருஜி நகரைச் சேர்ந்த சரத் (வயது 33) நாகையகோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (வயது25), நாகம்பட்டியைச் சேர்ந்த
தங்கபரமேஷ் (வயது 41), வேடசந்தூர் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 45) ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் நீளமான வாள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசில் பிடிபட்ட பிரபல ரவுடி சுத்தமல்லி சுந்தர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை, உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.