July 6, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை அருகே தார் தொழிற்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

1 min read

Villagers oppose setting up of tar factory near Nellai.

6.7.2026
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் தார் தொழிற்சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, தனக்கர்குளம் கிராம மக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தனக்கர்குளம் கிராம மக்கள் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மேலும், தொழிற்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் வடக்குக்குளம் அமைந்துள்ளது. இக்குளம் மழைநீரைச் சேமித்து, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கும் நிலத்தடி நீர் வளத்திற்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. தொழிற்சாலை அமைவிடத்தில் இருந்து சுமார் 964 மீட்டர் தொலைவில் தனக்கர்குளம் கிராமம் அமைந்துள்ளது. தொழிற்சாலையில் இருந்து வெளிப்படக்கூடிய புகை, தூசி மற்றும் பிற மாசுபடுத்தும் துகள்கள் நீர்நிலைகள், சுற்றுச்சூழல், விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலனை பாதிக்கும் அபாயம் இருப்பதாக நாங்கள் அச்சப்படுகிறோம்.

மேலும், தொழிற்சாலை அமைவிடத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளன. அப்பகுதியில் உள்ள காலி நிலங்கள் தற்போது உள்ளூர் மக்களால் மாடுகள் மற்றும் ஆடுகளின் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை செயல்பட்டால் அந்த மேய்ச்சல் நிலங்களும் மாசுபட்டு, கால்நடைகளின் உடல்நலனும் பாதிக்கப்படக்கூடும்.

இந்தத் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே அமைதியான போராட்டம் நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படாது என்று உறுதியளித்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பின்னர் 21-5-2026 அன்று பொதுமக்களுக்கும், அருகிலுள்ள நில உரிமையாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

பொதுமக்களின் எதிர்ப்பு, விவசாய நிலங்கள், வடக்குக்குளம் நீர்நிலை மற்றும் அருகிலுள்ள குடியிருப்புகள் போன்ற முக்கிய அம்சங்கள் இருந்தபோதிலும், பொதுக் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டதா, உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா, சம்பந்தப்பட்ட துறைகளின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டனவா, அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து எங்களுக்கு நியாயமான சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே, தாங்கள் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

  1. சர்வே எண் 540-ல் முன்மொழியப்பட்டுள்ள தார் தொழிற்சாலை அமைவிடத்தில் உடனடியாக நேரடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
  2. வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய அனைத்து அனுமதிகளின் சட்டப்பூர்வத்தன்மையை சுயாதீனமாகவும் வெளிப்படையாகவும் விசாரிக்க வேண்டும்.
  3. விசாரணை நிறைவடையும் வரை தொழிற்சாலை தொடர்பான அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்.
  4. விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் கண்டறியப்பட்டால் வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ் மற்றும் பிற அனுமதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  5. விசாரணையில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் ஏதேனும் விதிமீறல்கள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு பொறுப்பான தாசில்தார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் சட்டப்படி துறை ரீதியான மற்றும் சட்ட ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  6. விவசாய நிலங்கள், நீர்நிலைகள், நிலத்தடி நீர் வளம், கால்நடைகள், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  7. இம்மனுவின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு தகவல் வழங்க வேண்டும்.

எங்களின் வாழ்வாதாரமான விவசாயம், சுற்றுச்சூழல், நீர்நிலைகள் மற்றும் பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்க தாங்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *