இந்திய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஸ்னோய்-ஐ நாடுகடத்த அமெரிக்கா தீவிரம்
1 min read
US keen on extraditing Lawrence Bishnoi from Indian prison.
9.6.2026
நாடுகடந்த குற்றச் செயல்களில் ஈடுபடும் சர்வதேச கும்பல்களை பிடிக்க அமெரிக்கா, ஆபரேஷன் ‘Hard Ball’ என்ற நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து இயங்கி வரும் கும்பல்கள் முக்கிய குறியாக அமைந்துள்ளன.
அந்த வகையில் நாடு கடந்த கொலை, பணம் பறிப்பு, துப்பாக்கிச்சூடு, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக பிரபல இந்திய கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஸ்னாய் மீது எப்பிஐ வழக்குப்பதிந்துள்ளது.
பஞ்சாபை மையமாக வைத்து இயங்கி வரும் பிஸ்னோய் கும்பலுடன், ஜஃகு பகவான்புரியா, ரவீந்தர் சிங் தண்டா ஆகிய இந்திய குற்ற கும்பல் தலைவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூவரின் கும்பல்களும் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஈடுபட்ட குற்றச்செயல்களுக்காக அவர்கள் மீது எப்பிஐ வழக்குபதிந்துள்ளது.
இங்கு 24 கைதுகள், 37 கிரிமினல் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த Hard Ball நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இவர்களுடன், குற்ற கும்பல்கள் சுதந்திரமாக இயங்க அவர்களுக்கு துணைபோவதாக பஞ்சாப் காவல் அதிகாரி குரீந்தர்ஜித்சிங் நாக்ராவின் பெயரையும் எப்பிஐ வழக்கில் சேர்த்துள்ளது.
குரீந்தர்ஜித்சிங் உட்பட இந்த கும்பல் தலைவர்களை அமெரிக்காவுக்கு நாடுகடத்த எப்பிஐ தீவிரம் காட்டி வருகிறது.
பஞ்சாபில் புரையோடிருக்கும் ஊழல் காரணமாக இந்த கும்பல்கள் கண்டங்கள் கடந்து சுந்தந்திரமாக செயல்படுவதாக அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
லாரன்ஸ் பிஸ்னோய் தற்போது குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சமர்மதி சிறையில் உள்ளான். பகவான்புரியாவும் சிறையில் தான் இருக்கிறான்.
ஆனால் சிறையில் இருந்தபடியே சர்வதேச அளவில் தனது கும்பலை இவர்கள் இயக்கும் அளவுக்கு இந்திய சிறைகள் பலவீனமான பாதுகாப்புடன் உள்ளதாக எப்பிஐ தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க துணை அட்டார்னி ஏஸேலீ இதுகுறித்து பேசுகையில், எங்கள் சிறைகளுக்கு அந்த குற்றவாளிகள் வந்தால் இப்போதுபோல சுதந்திரமாக இயங்க முடியாது என கூறி, இந்திய சிறைகளை விமர்சித்துள்ளார்.
இந்த குற்றவாளிகளில் லாரன்ஸ் பிஸ்னோய் மீது அமெரிக்கா தனி கண் வைத்துள்ளது. கனடாவில் ஜூன் 2023 அன்று காலிஸ்தான் அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு உத்தரவிட்டவன் பிஸ்னோய் என எப்பிஐ பதித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இதை மத்திய அரசு மறுத்தது.
இப்போது கனடாவில் மார்க் கார்னி தலைமையில் அரசு அமைந்துள்ள நிலையில், நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என என மூத்த கனேடிய போலீஸ் அதிகாரி துணை கமிஷனர் லிசா மோர்லேண்ட் புதன் அன்று தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து கனடாவின் விளக்கம் வந்துள்ளது.
ஆனால் அமெரிக்கா, பிஸ்னோய் மற்றும் அவனது நண்பர் சதீந்திரஜீத் சிங் என்கிற கோல்டி பிரார் தான் நிஜ்ஜார் கொலைக்கு உத்தரவிட்டவர்கள் என அடித்துக்கூறியுள்ளது.
இன்னும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கும் கோல்டி பிராரை பிடிக்க அமெரிக்கா 50,000 டாலர் வெகுமதி அறிவித்துள்ளது.
இதனிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் பெடரல் ஆவணங்களின்படி, பஞ்சாப் ஸ்டேஷன் கவுஸ் அதிகாரியாக உள்ள போலீஸ் அதிகாரி குரீந்தர்ஜித்சிங் நாக்ரா, மற்றொரு குற்ற கும்பலான பகவான்புரியா கும்பலுக்காக வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் இந்திய குடும்பத்தை மிரட்டி பணம் பறிக்க இவர் பகவான்பிரியா கும்பலுக்கு துணை போயுள்ளார். பணம் தரவில்லை என்றால் பஞ்சாபில் உள்ள ஒரு கொலை வழக்கில் அவர்களை சிக்க வைத்துவிடுவேன் என கூறி லாஸ் ஏஞ்சல்ஸில் வாழும் அந்த இந்திய கும்பத்திடம் நாக்ரா 4,00,000 டாலர் புரிந்ததாக அமெரிக்க தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் நாக்ரா மீது இந்திய அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டி, அவரையும் அமெரிக்காவுக்கு நாடுகடத்த முயற்சித்து வருவதாக அமெரிக்க துணை அட்டார்னி ஏஸேலீ தெரிவித்துள்ளார்.