’இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா ஒப்புதல்-ககன்யான் திட்டத்திலும் இணைகிறது
1 min read
Australia agrees to export uranium to India; also joins the Gaganyaan mission
9.7.2026
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த அவர், அடுத்த கட்டமாக ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அப்போது மெல்போர்ன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இந்தியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்தில் இணைவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு ஆதரவாக, கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், அணுசக்தி, கடல்பாதுகாப்பு போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதன் பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில்; “இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் துடிப்பான ஜனநாயக நாடுகள், பன்முக கலாச்சாரம் கொண்ட சமூகங்கள் மற்றும் முக்கியமான கடல்சார் வல்லரசுகள். இரு நாடுகளின் உலகளாவிய பார்வையும் ஒன்றாக இருப்பதால் பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் உறவு மேலும் வலுவடைகிறது.” என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் கூறுகையில், ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான கூட்டாளிகளில் இந்தியாவும் ஒன்று. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் வலுவாக மாறியுள்ளது.” என்றார்.