August 25, 2026

Seithi Saral

Tamil News Channel

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்-இந்தியா கவலை

1 min read

Renewed war tensions in the Middle East; India concerned.

9.7.2026

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின.

இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடுத்தது. அத்துடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை குறிவைத்தும் தாக்கியது.

மறுபுறம் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயும் பயங்கர தாக்குதல்கள் நடந்தன.

ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர் ஈரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்தது. அது மட்டுமின்றி வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் பாதித்தது.

இடையில் ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கி இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பை சந்தித்தன.

மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து சர்வதேச நாடுகளில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

சுமார் 40 நாட்கள் தீவிர தாக்குதலுக்குப்பின் இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தன. பின்னர் பெரும் முட்டுக்கட்டைகளுக்குப்பின் கடந்த மாதம் 17-ந்தேதி ஈரான்-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஹார்முஸ் நீரிணை சுங்கக்கட்டணம் இன்றி திறப்பு, ஈரானின் எண்ணெய் விற்பனைக்கு ஒப்புதல், ஈரானின் அணு ஆயுத திட்டம் தொடர்பாக 60 நாட்கள் பேச்சுவார்த்தை உள்ளிட்ட 14 அம்சங்கள் நிறைந்த இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஆகியோர் கையெழுத்து போட்டனர்.

இதனால் வளைகுடாவில் பதற்றம் மெல்ல மெல்ல தணிந்து வந்தது. ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகமும், அதன் விலையும் மெல்ல மெல்ல சீராகி வந்தது. மேலும் இறுதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்தில் இது சுமுகமாக நடந்து வந்தது.

இதற்கிடையே போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் அடக்க சடங்குகளும் ஈரானில் தொடங்கின. கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த இறுதிச்சடங்குகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து காமேனி பிறந்த மசாத் நகரில் இன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இவ்வாறு அனைத்தும் சுமுகமாக சென்று கொண்டிருந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது நடந்த தாக்குதலால் மீண்டும் வளைகுடா பிராந்தியம் கொதிநிலைக்கு சென்றுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறந்திருந்தாலும், அதில் கப்பல் போக்குவரத்துக்கு குறிப்பிட்ட பாதையை அது காட்டியுள்ளது. அந்த பாதையில்தான் கப்பல்கள் சென்று வர அது அனுமதிக்கிறது. இதை மீறி செல்லும் கப்பல்களை அந்த நாடு தாக்கி வருகிறது. அப்படி செவ்வாய் அன்று 3 கப்பல்களை அந்த நாடு தாக்கியது.

இதைப்போல மேலும் 2 கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருந்தன. எனினும் சிறிதளவு சேதத்தை சந்தித்த அந்த கப்பல்கள், தொடர்ந்து பயணத்தை தொடர்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தை கொடுத்தது. எனவே ஈரான் எண்ணெய் வினியோகத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை உடனடியாக ரத்து செய்தது.

அத்துடன் அடுத்த சில மணி நேரங்களில் ஈரான் மீது பயங்கர தாக்குதலை நடத்தியது. குறிப்பாக ஈரானின் ரேடார் அமைப்புகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து தாக்கியது.

மேலும் ஈரானின் அணுமின் திட்டம் அமைந்துள்ள புஷேரிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. முக்கியமாக, ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட படகுகள் மீதும் தாக்குதல் நடந்தது.

ஈரானின் பல்வேறு பகுதிகளை குறிவைத்து செவ்வாய் அன்று இரவில் அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் உடனடியாக பதிலடி கொடுத்தது. குறிப்பாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல் காரணமாக ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5 சதவீதம் விலை அதிகரித்தது.

இந்த மோதலில் மேலும் ஒரு அதிரடியாக, ஈரானுடன் போர் நிறுத்தம் தொடர்பாக செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார். எனினும் ஈரானுடனான பேச்சுவார்த்தையை தொடர அனுமதிப்பதாகவும் கூறினார்.

துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டுக்கு இடையே இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘என்னைப்பொறுத்தவரை அது (போர் நிறுத்த ஒப்பந்தம்) முடிந்து விட்டதாக நினைக்கிறேன். ஆனால் அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தையை தொடரலாம். ஆனால் அவர்கள் நேரத்தை வீணடிப்பதாகவே கருதுகிறேன்’ என்று கூறினார்.

பின்னர் சில மணி நேரத்துக்குப்பின் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவித்தார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் வளைகுடா பிராந்தியம் முழுவதும் மீண்டும் உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் மத்திய கிழக்கில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, மோதல்கள் அதிகரித்திருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதல்கள் அமைதியை குலைக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நாடுகள் அமைதி காத்து பதற்றத்தைக் குறைக்க வேண்டும். பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *