July 13, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய வம்சாவளியான கூகுள் நிறுவன உயர் அதிகாரி கணவனால் சுட்டுக் கொலை

1 min read

Indian-origin Google executive shot dead by husband

13.7.2026
அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய பெண் உயர் அதிகாரி கணவரால் சுட்டுக் கொல்லபட்ட பயங்கரம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், கூகுள் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு தலைவராக பணியாற்றி வந்தவர் 57 வயதான இந்திய வம்சாவளிப் பெண் ஷீத்தல் வ்ரெசியன்.

இவர் தனது கணவர் கிர்க் பி. வ்ரெசியன், 23 வயது மகன் ஜேசன், மகள் ஜெசிகா ஆகியோருடன் ஜார்ஜியாவின் அட்லாண்டா அருகே உள்ள ஸ்மிர்னா நகரில் வசித்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிற்குள் தம்பதி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த கணவர் கிர்க், ஷீத்தல் மற்றும் அவரது மகன் ஜேசன் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஷீத்தலை மீட்டனர்.

எனினும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

23 வயது மகன் ஜேசன், உடம்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த காயங்களுடன் வீட்டிற்கு வெளியே விழுந்து கிடந்தார். அவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஷீத்தலின் கணவர் கிர்க் வ்ரெசியனை போலீசார் சம்பவ இடத்திலேயே வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

அவர் மீது கொலை, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் கோப் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டிற்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கொல்லப்பட்ட ஷீத்தல் தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஆவார்.

தனது குழந்தைப் பருவத்தை இங்கிலாந்து, இந்தியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் கழித்த ஷீத்தல், பின்னர் அமெரிக்கா வந்து ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியல்பட்டம் பெற்றார்.

கூகுள் நிறுவனத்தின் மூத்த பொறியியல் தலைவராக பணியாற்றுவதற்கு முன்பு, Home Depot நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவுக்கு அவர் தலைமை தாங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *