கடையநல்லூர்: உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
1 min read
Kadayanallur: ‘Seeking You in Your Town’ Scheme
15/7/2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், அரசின் பல்வேறு திட்டப்பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம். அதனடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க கடையநல்லூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, கம்பனேரி கிராமத்தில் உள்ள எஸ். எஸ்.கிராண்ட் மஹாலில் களஆய்விற்கு செல்வதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடங்கள் குறித்தும் கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், இப்பள்ளி வளாகத்தை பசுமையான வளாகமாக மாற்றும் விதமாக மரக்கன்றுகளை நட்டார்.
பின்னர். சொக்கம்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகம், பொது சுகாதார கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து. கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சியில் உள்ள பேச்சி அம்மன் கோவில் தெருவில் OMDGF Peri Urban Panchayat 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.4.17 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்தினை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தர்மாபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறையின் மூலம் செயல்படும் குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.