இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
1 min read
India’s first hydrogen passenger train – Prime Minister Modi flags it off.
17.7.2026
நாட்டின் முதலாவது, உலகின் நீண்ட தூர ஹைட்ரஜன் எரிபொருள் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது அவர் சுமார் ரூ.26 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதில் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் பயணிகள் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரெயில் என்ஜினை தயாரிப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின. ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரெயில்வே இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்துக்கான டெண்டர் ஐதராபாத்தை சேர்ந்த மேதா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது.
ஹைட்ரஜன் ரெயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் நடைபெற்றது. ரெயில் வடிவமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து, ஹைட்ரஜன் பயணிகள் ரெயிலை அறிமுகப்படுத்த கடந்த மே 22-ந்தேதி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் அரியானா மாநிலம் ஜிந்த் ரெயில் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் தூய எரிசக்திக்கு மாறும் இந்தியாவின் லட்சிய பயணம் மற்றும் நிலையான – பசுமையான ரெயில் போக்குவரத்துக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.
ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு இயக்கப்பட்டது. பின்னர் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்கின. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்த வரலாற்று சிறப்புமிக்க முதல் ஹைட்ரஜன் ரெயில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரெயில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.
பன்முக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த ரெயில் அரியானா மாநிலத்தில் மின்மயமாக்கப்படாத 89 கி.மீ. நீளமுள்ள ஜிந்த் – சோனிபட் வழித்தடத்தில் உள்ள 12 ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரெயில் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த ரெயில் தினமும் 2 முறை இருமார்க்கங்களிலும் இயக்கப்படும். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இதன் பயண கட்டணம் மிக குறைவாக ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல ரெயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாசில்லா ரெயில் இயக்கத்துக்கான அடுத்த கட்ட பாய்ச்சலை இந்திய ரெயில்வே முன்னெடுத்து உள்ளது.