உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சுக் உடல் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம்
1 min read
Risk of organ failure for Sonam Wangchuk, who is on a hunger strike
17.7.2026
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் காவலரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ஜூன் 28 இல் வந்து இணைந்த லடாக் மாநில உரிமை செயல்பாட்டாளர் மற்றும் கல்வியாளர், விஞ்ஞானி என பன்முகம் கொண்ட சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
இந்த உண்ணாவிரதம் இன்று (ஜூலை 17) 20வது நாளை எட்டியது. 59 வயதான சோனம் வாங்சுக் இந்த உண்ணாவிரததால் ஏற்கனவே 9 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளார். அவரின் எடை தற்போது 56.9 கிலோவாக உள்ளது.
அவரின் உடலின் நீரேற்றம், ரத்த சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு தொடர்ந்து சீரற்றதாகி வருகிறது.
“நான் இதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் சோனம் வாங்சுக் தன் மரணப் படுக்கையில் உள்ளார்” என சிஜேபி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று வெளியான வீடியோவில் சோனம் வாங்சுக் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்க்க முடிந்தது. நேற்று மட்டும் கழிவறை செல்லும்போது 2 முறை அவர் கீழே விழப் பார்த்தார் என தீப்கே தெரிவித்துள்ளார். அந்த அளவு அவரின் உடல் பலவீனமடைந்துள்ளது.
அன்றைய அந்த வீடியோவில், தன் தளர்ந்த நடையில் வாங்சுக் ஆதரவாளர்களின் உதவியுடன் கழிவறை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து சென்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தகு சூழலிலும் அவரின் முகத்தில் இரு மெல்லிய புன்னகையையும், பெரும்பாலும் மாணவர்களை உள்ளடக்கிய ஆதரவாளர்களை நோக்கி அவர் கையசைத்தார். அந்த மாணவர்களில் பலர் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் அவரது போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி வந்தவர்கள் ஆவர்.
அன்றும் தீப்கே, வாங்சுகை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி வலியுறுத்தினார். ஆனால் வாங்சுக் ஒருவித தீர்க்கத்துடன் அதை மறுத்திவிட்டார்.
சிஜேபியின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் “நீ பேசாம இரு. என்னை உண்ணாவிரதத்தை கைவிட சொல்லி கேக்காத. அரசாங்கம் ஏன் நம்ம சொல்றதை கவனிக்க மாட்டேங்குதுன்னு கேளு” என வாங்சுக் தீப்கேயை கண்டிப்பது இடம்பெற்றுள்ளது.
வாங்சுக் தற்போது ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே அவருக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசுக்கு உத்ராவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு குடிமகனின் உயிரும் முக்கியம், வாங்சுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, தேவைப்பட்டால் தாங்கள் தலையிடுவோம் என தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு துரும்பும் அசையவில்லை.
இதனிடையே, வரும் 20 ஆம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரின்போது பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல நாடு முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கு வாங்சுக் தன் தளர்ந்த குரலில் அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சோனம் வாங்சுக்கை சென்று சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.