கடையம் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்
1 min read
Monkey menace in the Kadayam area
17.7.2026
தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் குரங்குகள் வீடு புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையத்தில் கீழக்கடையம், தெற்கு கடையம், கல்யாணிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருக்கும் உணவுப் பொருட்களை சூரையாடி அட்டகாசம் செய்து வருகிறது. வீட்டுக்காரர்கள் விரட்டினால் குரங்குகள் அவர்களை கடித்து மூர்க்கமாக தாக்குகின்றன. இவ்வாறு கடி வாங்கிய பலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது தற்போது கடையம் பகுதியில் வாடிக்கையாகி வருகிறது.
பகல் நேரங்களில் வீட்டிற்கு வரும் குரங்குகள் வீட்டில் வளர்க்கும் வாழை மரங்களிலுள்ள வாழைக் குலைகள் மற்றும் பழ மரங்களில் பழுத்திருக்கும் பழங்களை வேட்டையாடுகிறது. வீட்டிற்கு வெளியே ஒன்றுமில்லையென்றால் வீட்டுற்குள் புகுந்து வேட்டையாடத் தொடங்குகிறது. வீடுகளிலுள்ள குளிர்பதனப் பெட்டியில் மறைத்து வைத்திருக்கும் உணவுப் பொருட்களைக் கூட விட்டு வைக்காமல் குரங்குகள் வேட்டையாடித் தீர்க்கின்றன. விரட்டினால் கடித்துவிடும் என்ற அச்சத்தில் மக்கள் ஒளிந்து நிற்கும் சூழல் உள்ளது.
பகல் நேரங்களில் சர்வசாதாரணமாக தெருக்களில் குரங்குகள் நடமாடுவதால் சிறுவர்கள் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் வராமல் பெற்றோர் பாதுக்காக்க வேண்டிய அச்சம் நிறைந்த சூழலில் கடையம் பகுதி மக்கள் உள்ளனர்.
வனத்துறையினர் மயக்க மருந்து வைத்தோ அல்லது கூண்டுகள் வைத்தோ குரங்குகளை பிடித்து குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும் குரங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டுமென மக்கள் கோரியும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கமாலிருப்பது இப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.