பேரணியில் பங்கேற்க டிஸ்சார்ஜ் செய்யுங்கள்- வாங்சுக் வேண்டுகோள்
1 min read
Discharge me to participate in the rally – Wangchuk’s request
20/7/2-026
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன.
இதனை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி கட்சியினர் கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அமைப்புகளாகவும், தன்னிச்சையாகவும் வந்து கலந்துகொண்டு 1 மாத காலமாக போராடி வருகின்றனர்.
குறிப்பாக இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் சனி அன்று டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையே இன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் ஜந்தர் மந்தரில் இருந்து பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் இந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு அங்கு போலீசார் மற்றும் மத்திய படையினர் குவிக்கப்பட்டனர்.
பாராளுமன்றம் நோக்கி பேரணியை தொடங்க முனைப்பு காட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரைத் தவிர பிற பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதித்து, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
மேலும் நகரின் 5 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்வோர் ரெயில் கிடைக்காமல் அவதியுற்றனர்.
தடைகள் இருந்தபோதிலும் ஜந்தர் மந்தரில் அதிகளவில் கூடியுள்ள இளைஞர்கள் பேரணியை தொடங்க மும்முரம் காட்டி வருகின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு சப்தர்ஜங் அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சோனம் வாங்சுக் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை சிறப்பு மருத்தவ நிபுணர் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
தான் நலமாக உள்ளதாகவும் நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் தான் பங்கேற்க ஏதுவாக தன்னை டிஸ்சார்ஜ் செய்ய சோனம் வாங்சுக் கோரியுள்ளார்.
அவர் தன் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில்,
“இன்று எனது உடல்நிலை மிகவும் சீராக, நலமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் நான் கலந்துகொள்ளும் வகையில், தற்காலிகமாகவாவது என்னை மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு இடையே, சிஜேபி தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் காவல்துறையினரால் துணை ஆணையர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இது குறித்துப் பேசிய சௌரவ் தாஸ், “கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்த எங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
நிர்வாகத் தரப்பிலிருந்து இந்த அழைப்பு மிகவும் தாமதமாக வந்திருந்தாலும், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளை தடுக்க நாங்கள் விவாதத்திற்குத் தயாராக உள்ளோம்” என்று கூறினார்.
இதனிடையே மத்திய அரசு தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்கும் வரையோ, அல்லது மழைக்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கல்வித் துறை குறித்து விவாதிப்போம் என்று உறுதியளிக்கும் வரையோ தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சோனம் வாங்சுக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.