தென்காசியில் உலக மக்கள் தொகை தினம்- பேரணி
1 min read
World Population Day Rally in Tenkasi
20.7.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அனைவரும் உலக மக்கள் தொகை தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
மேலும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையொப்பம் இட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியதாவது:-
1987 ஆம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை 500 கோடியை தாண்டி விட்டது. சீரான மக்கள் தொகை வளர்ச்சியை உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த வருட கருப்பொருள் “தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும் திட்டமிடப்படாத கர்ப்பங்களை தடுப்பதற்காகவும் கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம்” என்பதாகும்.
உறுதிமொழி நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும். குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை நிலைப்படுத்துதல் மற்றும் போதிய பிறப்பு இடைவெளி முதன்மையானதும். முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன்.
திட்டமிட்ட குடும்பம், திருமணத்திற்கேற்ற வயது. சரியான வயதில் முதல் குழந்தையை பெற்றுக் கொள்ள தாமதப்படுத்த வேண்டுமெனில் மேற்கொள்ள வேண்டிய குடும்பநல முறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய்சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையைத் தடுத்தல். இளம் வயது திருமணத்தை தடுத்தல். இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை நிலைபடுத்துதலை உறுதிப்படுத்துதல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல் மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் என உறுதி அளிக்கிறேன்.
குடும்பநலத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன் என்ற உறுதி மொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் குழந்தைகளுக்கு இடையே சரியான பிறப்பு இடைவெளி இருக்கும் போது குடும்பங்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறும் என முழக்கமிட்டனர். மேலும், திருமணத்துக்கு ஏற்ற வயது. தாய் சேய் நலம், 3 வருட பிறப்பு இடைவெளி, உயர் வரிசை குழந்தை பெற்ற தாய்மார் களின் எண்ணிக்கையை குறைத்தல், இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல் போன்ற விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வீராசாமி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் டாக்டர் பிரேமலதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, இணை இயக்குநர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு) சின்னதுரை, தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பால்துரை, மக்கள் கல்வி தகவல் அலுவலர் ரமேஷ், இளநிலை நிர்வாக அலுவலர் கூத்தநயினார் (எ) செந்தில், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் வைஷ்ணவி தேவி. வட்டார சுகாதார புள்ளியலாளர்கள் மற்றும் குடும்பநல அலுவலக பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.