July 21, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லி நோக்கி வந்த பஞ்சாப் விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தம்

1 min read

Punjab farmers heading towards Delhi stopped at the Shambhu border

21.7.2026
இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து கூட்டப்பட்டது.

தேஷ் பச்சாவ் மோட்சா என்ற அமைப்பின் கீழ் பஞ்சாப், அரியானா மற்றும் இமாச்சல பிரதேச விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டு இந்த மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்தன.

இதில் பங்கேற்க, பஞ்சாபில் இருந்து ஆயிரக்கணக்கான விவாசாயிகள் தலைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த நிலையில் பஞ்சாப், அரியானா எல்லையான ஷம்புவில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

எல்லையில் இரும்பு முற்கள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவற்றால் தடுப்பு அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், கோபமடைந்த விவசாயிகள் ஷம்பு எல்லையையே போராட்டக் களமாக மாற்றியுள்ளனர்.

பஞ்சாப் அணிவகுப்பு தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதேபோல டெல்லி நோக்கி செல்ல முற்பட்ட விவசாயிகள் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் அந்த இடத்தையே போராட்டக்களமாக மாற்றினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. அதேபோல இம்முறையும் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள் அன்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதன் பின்னணியில் அவர்கள் நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றபோது போலீசாரால் தாக்கப்பட்டனர்.

தடியடி, கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தி அவர்களை போலீசார் கலைத்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 118 போலீசார், 70 போராட்டக்காரர்கள் காயமுற்றனர். 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்தின் அம்சங்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வேளாண் பொருட்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இது அமெரிக்க விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என அந்நாட்டு தலைவர்கள் பேசியதும் வைரலானது.

அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு வெளிப்படையாக அழுத்தம் கொடுத்து வருகிறது.

சோயாபீன்ஸ், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் மீதான வரிகள் குறைந்தால், மானியம் பெறும் அமெரிக்கப் பொருட்கள் இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கும். இதனால் இந்தியச் சிறு விவசாயிகள் அமெரிக்கப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

இந்தியாவில் சுமார் 8 கோடி கிராமப்புற குடும்பங்கள் பால் பண்ணைத் தொழிலையே நம்பியுள்ளன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் கிராமப்புற பொருளாதாரம் முற்றிலுமாகச் சீர்குலையும் என்று விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றனர்.

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாகக் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களிடம் விரிவான கலந்தாய்வு நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *