தேர்வு முறைகேடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க சபாநாயகரிடம் ராகுல் கோரிக்கை
1 min read
Rahul requests the Speaker to hold a discussion in the Lok Sabha regarding examination irregularities
21.7.2026
டெல்லியில் நேற்று பாராளுமன்றம் நோக்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணியின் போது இளைஞர்கள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் இன்றும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் இன்றும் (செவ்வாய்க்கிழமை) கடும் அமளியில் ஈடுபட்டன.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே,
“லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு, அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்கிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.
கார்கே பேசத் தொடங்கியதும் ஆளுங்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். அதற்குப் பதிலடியாக காங்கிரஸ் எம்பிக்களும் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு, அவையை நடத்த முடியாத சூழல் உருவானது.
இதனால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் அமளியால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
மறுபுறம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்துப் பேசினார்.
சிஜேபி போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:
“திங்கள் அன்று தங்கள் எதிர்காலம் குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது.
தேர்வு முறைகேடுகள் குறித்து எந்தப் அக்கறையும் இல்லாத அரசைக் கண்டித்தும், மாணவர் நலன் குறித்தும் நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்ற எளிமையான கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைத்துள்ளோம்.
இந்தியாவின் எதிர்காலமான மாணவர்களின் பிரச்சனைகளைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியவில்லை என்றால், இந்த நாடாளுமன்றம் வேறு எதற்காக இயங்குகிறது?
இந்த விவகாரத்தை சும்மா விட்டுவிடாது. மாணவர்களின் குரல் வீதிகளிலும் ஒலிக்கும், நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும் என்பதை நாங்கள் உறுதிசெய்வோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.