தர்மேந்திர பிரதான் ராஜினாமா: கரப்பான் பூச்சி கருத்து
1 min read
Dharmendra Pradhan’s Resignation: ‘Cockroach’ Remark
25.7.2026
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
“கடந்த 10 நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்த்து மனம் கலங்கிப் போயுள்ளேன்.
பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தடைகளை உருவாக்கவும் மாணவர்களைத் தவறாக வழிநடத்தவும் முயன்றனர். இச்செயல் எனக்கு ஆழ்ந்த மனவேதனையை அளித்தது. இந்தியாவின் இளைஞர் சக்தியே நாட்டின் உண்மையான பலம்.நாட்டின் இளைஞர்கள் குழப்ப வலையில் சிக்கிக்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
இளம் தலைமுறையின் கனவுகளை நனவாக்குவது நம் கடமை. அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். இளைஞர் சக்தியை சதிவலையில் சிக்க விடமாட்டோம். தற்போதைய சூழலை.
தேசவிரோதிகள் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.
பிரதமரின் வழிகாட்டுதல், நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள், அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மற்றும் நான் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்ற அனைத்து நபர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேச சேவை எனது வாழ்வின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். அதற்காக நான் என்றென்றும் அர்ப்பணிப்புடன் இருப்பேன்”
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகிய நிலையில் டெல்லி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, “நாங்கள் அதை சாதித்துவிட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார்,” என்று தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
இதுதான் ஜனநாயகம். அவர் (தர்மேந்திர பிரதான்) ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், எங்களிடம் இன்னும் இரண்டு கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் சும்மா போய்விட மாட்டோம்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்.அந்தக் குடும்பங்கள் அனைத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, 20-ஆம் தேதியன்று அராஜகமாக நடந்துகொண்ட அந்தப் போலீஸ் குண்டர்கள்… அதற்காக அந்தப் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள், கரப்பான் பூச்சியைக் கூட சீண்டாதீர்கள்.
இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.