கடையநல்லூரில் ஹபிபீ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு விழா
1 min read
Appreciation ceremony for the Habibi film crew in Kadayanallur
28.7.2026
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றித் திரைப்படமான “ஹபிபீ” திரைப்படக் குழுவினருக்கான பாராட்டு விழா,
கடையநல்லூர் காயிதேமில்லத் திடலில் நடைபெற்றது. இதில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு திரைப்படக் குழுவினரை பாராட்டி சிறப்புரையாற்றினார்.
இந்த பாராட்டு விழாவிற்கு கடையநல்லூர் எம்.எல்.ஏ. தி.மு.இராசேந்திரன் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியை எழுக்கருவி சேயன் இப்றாகீம் ஒருங்கிணைத்தார். மக்கள் மருத்துவர் டாக்டர் சஞ்சீவி, காதர் முஹைதீன் குத்பா பள்ளிவாசல் தலைவர் எம். செய்யது இப்ராகீம், தென்காசி மாவட்ட அரசு காழி மௌலானா மௌலவி ஏ.ஒய். முகையதீன் ஃபைஜி, அரசு ஒப்பந்தக்காரர் வி. கிருஷ்ண குமார் பி.இ. உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கம்பம் செல்வேந்திரன் மற்றும் எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்
அ. முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.
இயக்குநர் மீரா கதிரவன், எழுத்தாளர் வி.எஸ். முகம்மது அமீன், ஹபிபீ திரைப்பட நடிகர் ஈசா மற்றும் நடிகை அனுஸ்ரேயா ராஜன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ. தி.மு.இராசேந்திரன்
“சமீபத்தில் வெளிவந்து கடையநல்லூர் மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெற்றிப் படமான ஹபிபீ, மக்களின் மனதில் நீங்கா இடம் பெறும் படைப்பாக அமைந்துள்ளது. மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவை இயக்குநர் மீரா கதிரவனிடம் காண்கிறேன். கிராமிய வாழ்வியலையும் சமூகத்தின் உண்மை நிலைகளையும் திரைப்படமாக பதிவு செய்யும் அவரது முயற்சி பாராட்டத்தக்கது. இத்தகைய படைப்புகள் நமது மண்ணின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய பணியைச் செய்கின்றன” என்று பாராட்டிப் பேசினார்.
தொடர்ந்து, ஹபிபீ திரைப்படக் குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. திரைப்படக் கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த பாராட்டு விழா, கடையநல்லூர் மக்களின் வாழ்வியலை திரையில் பதிவு செய்து வெற்றி கண்ட ஹபிபீ திரைப்படக் குழுவினருக்கு அளிக்கப்பட்ட மகத்தான அங்கீகாரமாக அமைந்தது.