பிற மாநிலங்களுக்கு ஜல்லி, மணல் கொண்டு செல்ல தடை- பொதுமக்கள் கொண்டாட்டம்
1 min read
Ban on transporting crushed stone and sand to other states – Public rejoices.
28.7.2026
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஜ ஜல்லி மற்றும் கட்டுமான கற்கள் கொண்டு செல்வதற்கு 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதித் திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான ஜல்லி, கற்கள், கண்டாஸ், பாறைகள், எம்சாண்ட், மெட்டல் ஜெல்லி, பாலாஸ்ட், மில் கற்கள் மற்றும் ஹேண்ட் சக்காய்ஸ் போன்ற கட்டுமானப் பொருட்களின் தேவை மாநிலத்துக்குள் அதிகரித்துள்ளது.
சட்டவிரோத குவாரி இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பெருமளவிலான கற்கள் மற்றும் ஜல்லிகள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதனால் மாநிலத்துக்குள் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வு மற்றும் செயற்கை யான தட்டுப்பாடு உருவாகிறது. இது பொது மற்றும் தனியார் உள்கட்டமைப்புத் திட்டங்களை நேரடியாக பாதிக்கிறது.
மேலும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் மல்டி ஆக்சில் வாகனங்களால் உள்ளூர் சாலைகள் கடுமையாக பாதிக்கப் படுகின்றன. இந்த கனரக வாகனங்களால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளம் மற்றும் ஆந்திராவில் கற்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எனினும் தமிழகத்தில் இருந்து அதிகளவில் கற்கள் கொண்டு செல்லப்படுவதால், தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாகிறது.
இதையும் தாண்டி கற்களை வெட்டி இந்த இடைவெளி, சட்ட விரோத குவாரித் தொழிலுக்கும்,அனுமதிக்கப்
பட்ட அளவை எடுப்பதற்கும் வழி வகுக்கிறது. இது மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சூழலியலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, இந்த சூழலை கருத்தில் கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர, பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கற்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு பயன்படும் அனைத்துப் பொருட்களையும் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடையை மீறுபவர்கள் மீது தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவைச் செயல் படுத்துவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தடையை முறையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் தமிழ்நாட்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதித்த தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்தும் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் முன்னாள் தென்காசி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே. ரவிஅருணன்,
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் புளியரை ஜமீன், ஹோட்டல் ஹரிஹரன் உரிமையாளர் சாமி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.