August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்கள்

1 min read

Twin brothers marry twin sisters in Kerala

2.8.2026
கோட்டயம் அருகே இரட்டை சகோதரிகளை இரட்டையர்கள் மணந்தனர். திருமணத்தை நடத்திய பாதிரியார்களும், வழிபாட்டு உதவியாளர்களும் இரட்டையர்களாக அமைந்தனர்.

கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் உள்ள மெட்ரோபோலிட்டன் ஆலயத்தில் ஒரு அபூர்வ திருமணம் நடந்தது. அதாவது சங்கனாச்சேரியை சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ்-ஜோமோள் தம்பதிகளின் இரட்டையர்களான மகன்கள் அகில் (வயது29) மற்றும் நிகில் (29) ஆகியோர் பத்தனம்திட்டா, குளத்தூரை சேர்ந்த டோமிச்சன்-மேரி குட்டி தம்பதியரின் இரட்டையர்களான மகள்கள் மாகி மேரி (25), மரியா மேரியை (25) திருமணம் செய்து கொண்டனர். அதாவது மாகி மேரியை அகிலும், மரியா மேரியை நிகிலும் மணந்து கொண்டனர்.

இதில் சிறப்பான நிகழ்வு என்னவென்றால் இவர்களின் திருமணத்தை இரட்டையர்களாக பிறந்த பாதிரியார்களான காஞ்சிரப்பள்ளியை சேர்ந்த ஆன்றோ மற்றும் அஜோ ஆகியோர் நடத்தி வைத்தனர். மேலும் திருமண திருப்பலியின்போது உதவி புரிந்த வழிபாட்டு உதவியாளர்கள் (பீட சிறுவர்கள்) ஜெரோன் ஜேம்ஸ், ஜோகன் ஜேம்ஸ் ஆகியோரும் இரட்டையர்களாக பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணப்பெண்களான மாகி மேரியும், மரியா மேரியும் சிறு வயதில் இருந்தே இரட்டையர்களைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளனர். அவர்களின் விருப்பப்படி இரட்டையர்களான அகிலும், நிகிலும் இவர்களுக்கு மணமகன்களாக அமைந்தனர். இதையடுத்து திருமணத்தை நடத்தி வைக்க இரட்டையர்களான பாதிரியார்களையும், இரட்டையர்களான வழிபாட்டு உதவியாளர்களையும் மணமகள்களே தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி இந்த அசாதாரண திருமணம் அரங்கேறியது. இந்த திருமணம் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கிடையே திருமண புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களில் இரட்டை சகோதரர்கள் சரக்கு வணிக கப்பலிலும், இரட்டை சகோதரிகள் தகவல் தொழில் நுட்ப நிறுவன பொறியியல் ஊழியர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *