August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த விளையாட்டுப் பொருளை விழுங்கி 5 வயது சிறுவன் பலி

1 min read

5-year-old boy dies tragically after swallowing a toy found in a packet of chips!

3.8.2026
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பரிசாகக் கிடைத்த சிறிய பிளாஸ்டிக் பொம்மை பந்தை விளையாட்டாக வாயில் போட்ட 5 வயது சிறுவன், அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரு மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் முகுந்த் மயூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறுவன் முன்னாள் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் கௌரம்மா – சங்கர் நாயக் தம்பதியின் பேரனும், சந்தோஷ் – ஐஸ்வர்யா தம்பதியின் ஒரே மகனும் ஆவார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, சிறுவன் கடையில் வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டைத் திறந்து சாப்பிட்டுள்ளார். அப்போது அந்தப் பாக்கெட்டுக்குள் குழந்தைகளுக்குப் பரிசாக வழங்கப்படும் சிறிய அளவிலான பிளாஸ்டிக் பந்து ஒன்று இருந்துள்ளது.

அதை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராதவிதமாக அந்தப் பந்தை வாயில் போட்டு விழுங்கியதாகக் கூறப்படுகிறது.

சிறுவன் விழுங்கிய அந்தப் பிளாஸ்டிக் பந்து அவரது தொண்டைப் பகுதியில் பலமாகச் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவனுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனே பதறிப்போன குடும்பத்தினர் சிக்கிய சிறு பந்தை எடுக்க முயன்றும், துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் மூச்சுதிணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஹுன்சூர் ஊரகக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைசூருவின் ஹுன்சூர் பகுதியில் இதுபோன்ற அஜாக்கிரதை மற்றும் எதிர்பாராத விபத்துகளால் குழந்தைகள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல.

கடந்த மார்ச் மாதம், இதே தாலுகாவில் உள்ள தொட்டஹெஜ்ஜூர் கிராமத்தில் 6 மாதக் குழந்தை ஒன்று பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த காய்ந்த செம்பருத்திப் பூவை விழுங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சின்மய் கவுடா என்ற அந்த ஆண் குழந்தை, தனது மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வாசலில் இருந்த காய்ந்த பூவை வாயில் வைத்துள்ளது.

அதை மூத்த சகோதரன் பிடுங்க முயன்றபோது குழந்தை அதை அவசரமாக விழுங்கியதால், தொண்டையில் சிக்கிச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திருமணங்கள், விழாக்கள் மற்றும் பலகாரப் பாக்கெட்டுகளில் வரும் சிறிய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொம்மைகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *