பாலியல் புகார் வழக்கு: பிரிஜ்பூஷன் சிங் விடுவிப்
1 min read
Sexual harassment case: Brij Bhushan Singh discharged
3.8.2026
பா.ஜ.க முன்னாள் எம்.பி.யான பிரிஜ்பூஷன் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு 6 மல்யுத்த வீராங்கனைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். முன்னணி வீராங்கனைகள் பிரிஜ்பூஷன் மீது செக்ஸ் புகார் கூறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக வீராங்கனைகள் போராட்டமும் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து 6 முறை எம்.பி.யாக இருந்த அவர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்த வழக்கு டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. கடந்த 2024-ம் ஆண்டு பிரிஜ்பூஷன் சிங் மீது குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றச்சாட்டை பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 354 (பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறுவிளைவிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்), 54ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354டி (பின் தொடர்தல், தொல்லை கொடுத்தல்), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து இருந்தது.
புகார் அளித்த வீராங்கனைகளில் ஒருவர் மைனர் பெண் என்பதால் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக அவரது தந்தை திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையடுத்து அந்த புகாரை ரத்து செய்யக்கோரி டெல்லி போலீசார் அளித்த பரிந்துரையை ஏற்று பிரிஜ்பூஷனுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து போக்சோ பிரிவை கோர்ட்டு ரத்து செய்தது.
இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு ஆகஸ்டு 3-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
அதன்படி மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ்பூஷன் சிங், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இணை செயலாளர் வினோத் தோமர் ஆகியோரை கோர்ட்டு விடுவித்தது.
கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டு அஸ்வினி பன்வார் ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவிப்பதாக உத்தரவில் தெரிவித்தார்.
பிரிஜ் பூஷண் சிங் விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.