கடையம் திருவள்ளுவர் கழகத்தில் இலக்கிய மற்றும் கவிதை நூல் வெளியீட்டு விழா
1 min read
Literary and Poetry Book Launch Event at Kadayam Thiruvalluvar Kazhagam
14.8.2026
தென்காசி திருவள்ளுவர் நூற்றாண்டு கழகமும் கடையம் திருவள்ளுவர் கழகமும் இணைந்து நடத்திய இலக்கிய நிகழ்வாக நவில் தொறும் நூல் நயம் மற்றும் சிறப்பு நிகழ்வாக இயக்குநரும் எழுத்தாளருமான என். குமார் எழுதிய களிறு நடை எனும் கவிதை நூல் வெளியீட்டு விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சேவாலயா செல்லம்மாள் பாரதி கற்றல் மைய கலை பயில் மாணவர்களின் கடவுள் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்விற்கு கடையம் திருவள்ளுவர் கழக தலைவர் ஆ. சேதுராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் க.கொ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்புரையாற்றினார். தென்காசி நூற்றாண்டு திருவள்ளுவர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ந. கனகசபாபதி சிறப்புரையாற்றினார்.
பசுமை முதன்மையாளர் மற்றும் எழுத்தாளருமாகிய நல்லாசிரியர் ச. மாடசாமி, அம்பை தமிழ் இலக்கியபேரவையின் தலைவர் இலக்கிய செம்மல் ச. இலட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
களிறு நடை கவிதை நூலை வெளியிட்டு தென்காசி நூற்றாண்டு திருவள்ளுவர் கழக செயலாளர் இரசிகமணியின் வழிதோன்றல் இராம. தீர்த்தாரப்பன் சிறப்புரையாற்றினார். நூல்நயம் எனும் தலைப்பில் அம்பை திருவள்ளுவர் அறக்கட்டளையின் செயலாளர் சு. சிவசங்கரன், கல்பக் விருக்ஷா ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவுநர் மீ. தமிழ்செல்வி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த் துறையின் உதவி பேராசிரியர் சு.செ. பொன்சக்திகலா, பைந்தமிழ் இலக்கிய பேரவையின் நிறுவுநர் மற்றும் தலைவர் பாப்பாக்குடி முருகன் ஆகியோரும் குறள் சிந்தனையில் இ. தமிழ்ச்செல்வனும் உரையாற்றினர்.
இயக்குநரும் எழுத்தாளரும் களிறு நடை எனும் கவிதை நூலின் ஆசிரியருமான என். குமார் ஏற்புரை நிகழ்த்தினார். நூற்றாண்டு திருவள்ளுவர் கழக பொருளாளர் வ. சந்திரசேகரன் மகிழ்வுரையும் கடையம் திருவள்ளுவர் கழக இணைச் செயலாளர் செ. சோமசுந்தரம் நன்றியுரையும் ஆற்றினர்.
திருவள்ளுவர் கழக மகளிரணி கிருஷ்ண பொன்ஜோதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.