சொத்து குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை: ஐகோர்ட்டு உறுதி
1 min read
High Court upholds 3-year prison sentence for former DMK minister’s family in disproportionate assets case
17.8.2026
தமிழகத்தில், 1996 – 2001ம் ஆண்டுகளில், திமுக ஆட்சி காலத்தில், மருங்காபுரி திமுக எம்எல்ஏவாகவும், கால்நடை துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பி.எம்.செங்குட்டுவன். ஆட்சி மாற்றத்துக்கு பின், அவர் அதிமுகவில் இணைந்தார்.
திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 81 லட்சத்து, 42,977 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, செங்குட்டுவன், அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை, திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணையின் போது, செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்து விட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிட்ட நீதிமன்றம், அவரது மகன்கள், மகள் மற்றும் சகோதரர் மகளுக்கு, தலா 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, 2023ம் ஆண்டு அக்டோபரில் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பதிவு செய்யப்பட்ட சாட்சிகள் மற்றும் ஆவண சான்றுகள் மூலம், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து உள்ளனர் என்பதை, அரசு தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
எனவே, 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.