August 17, 2026

Seithi Saral

Tamil News Channel

சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது

1 min read

Four arrested for gang-raping a 13-year-old girl after giving her alcohol in Salem.

17.8.2026
சேலம் மாநகர் பகுதியில் 13 வயது பள்ளி சிறுமிக்குத் திட்டமிட்டு மதுபானம் கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகார் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் 14 பேரை பிடித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது தோழிகளுடன் சேர்ந்து அங்குள்ள ஒரு தனியார் பூங்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அச்சிறுமிக்கு சிலர் திட்டமிட்டு மது கொடுத்து பழக்கியுள்ளனர். பின்னர், அந்த பழக்கத்தை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, சிறுமியை ஓராண்டுக்கும் மேலாக பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அவர் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்து எச்சரித்துள்ளார்.

தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர். புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக, இக்குற்றச்சாட்டுகளுடன் நேரடியாக தொடர்புடைய 4 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

சிறுமிக்கு மது விநியோகம் செய்தது மற்றும் இந்த வன்கொடுமை சம்பவ பின்னணியில் தொடர்புடையவர்களாக கருதப்படும் மேலும் 14 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய முழு நெட்வொர்க்கையும் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக சேலம் மாநகரக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *