சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரப்பதிவு: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
1 min read
Property registration without visiting the Sub-Registrar’s office: Chief Minister Vijay launches the initiative.
17.8.2026
வீடு, மனை தொடர்பான பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பத்திரப்பதிவு செய்யும் வசதியை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதிதாக செயல்படுத்தப்படும் அடுக்குமாடி, மனைப்பிரிவு திட்டங்களில், வீடு, மனை விற்பனைக்கான பத்திரங்களை, சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல், சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகங்களில் இருந்தபடியே பதிவு செய்யலாம்.
பதிவுத்துறையின், ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் வாயிலாக, இந்த புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால், சார் – பதிவாளர் அலுவலகம் செல்லாமல் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு செய்யலாம்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று(ஆகஸ்ட் 17) நடந்த நிகழ்ச்சியில், இந்த புதிய வசதியை, முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், பதிவுத்துறை செயலர் குமரகுருபரன், பதிவுத்துறை ஐ.ஜி., அருண்சுந்தர் தயாளன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கட்டுமான நிறுவன அலுவலகங்களில், ‘வெப் கேமரா’ உடன் விரல் ரேகை, கருவிழி பதிவு செய்வதற்கான கருவிகள் மற்றும் இணையதள வசதியுடன் கணினி இருந்தால் போதும்
- இதில் தாக்கலாகும் பத்திரங்களை பதிவு செய்வது அல்லது திருத்தத்துக்காக திருப்பி அனுப்புவது குறித்து, சார் – பதிவாளர், 24 மணி நேரத்துக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும்
- திருத்தத்துக்காக திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களை, 30 நாட்களுக்குள் சரி செய்து தாக்கல் செய்ய வேண்டும்
- பதிவு முடிந்த பத்திரத்தின் பிரதி, இணையதளத்தில் பயனர் நுழைவுகணக்கில், 60 நாட்கள் வரை இருக்கும், இந்த சமயத்தில், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் தேவையான எண்ணிக்கையில் பிரதி எடுத்துக் கொள்ளலாம்
- பதிவு முடிந்த பத்திரங்களை பிரதி எடுக்கும் போது, முதல் பக்கம் முத்திரைத்தாளாக இருக்காது, ஒவ்வொரு முறையும் மாறுபடக்கூடிய, ஐந்து வண்ணங்களில் தானியங்கி முறையில் அச்சிட்டு வழங்கப்படும்
- ஒவ்வொரு பக்கத்திலும், ‘கியூ.ஆர்’ குறியீடு இருக்கும்; அதில் பத்திர எண், பதிவு செய்யப்பட்ட தேதி போன்ற விபரங்கள் இடம் பெறும்
- புதிய வசதி தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதை பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகி உள்ளது. புதிய வீடு, மனை பத்திரங்கள் இதன் வழியில் மட்டுமே பதிவுக்கு ஏற்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.