நெல்லை: 4 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை
1 min read
Nellai: Death sentence for priest who sexually abused four minor girls.
20.8.2026
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதியில் கிறிஸ்தவ சபை உள்ளது.
இங்கு பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஆபிரகாம் (வயது 47). இவர் கடந்த 2022-ம் ஆண்டு, திருச்சபைக்கு வந்த 4 சிறுமிகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்து, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்தார்.
மேலும், இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமிகளை அவர் கடுமையாக மிரட்டி உள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில், தேவர்குளம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பாதிரியார் ஆபிரகாம் மீது போக்சோ சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜராகி திறமையாக வாதாடினார்.
போலீசாரின் வலுவான ஆதாரங்கள் மற்றும் அரசு வக்கீலின் வாதங்கள் மூலம் பாதிரியார் ஆபிரகாம் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், 4 சிறுமிகளின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளி ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும், தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடத்தில் போக்சோ வழக்கில் குற்றவாளிகளுக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தூக்கு தண்டணை விதிக்கப்படுவது இது 4-வது முறை ஆகும்.