மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் ரூ.16.2 கோடிக்கு ஏலம்
1 min read
Letters handwritten by Mahatma Gandhi auctioned for Rs 16.2 crore.
20.8.2026
மகாத்மா காந்தி தனது நெருங்கிய கூட்டாளியும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி.ஹிங்கோரனிக்கு எழுதிய, உண்மை, அகிம்சை மற்றும் சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் சார்ந்த 688 கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு ஒன்று, ‘சாப்ரானார்ட்’ (Saffronart) நிறுவனம் நடத்திய ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையானது. இதன் மூலம் ஏலத்தில் விற்கப்பட்ட இந்திய வரலாற்று ஆவணத்திற்கான உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதிகள் அனைத்தும் மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதிய கடிதங்கள் ஆகும். ஆனந்த் டி.ஹிங்கோரனியின் மனைவி வித்யா மறைந்த பிறகு, அவருக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் மகாத்மா காந்தி இந்த கடிதங்களை எழுதியுள்ளார். பின்னர் இந்த கடித பரிமாற்றம் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்துள்ளது. பின்னாட்களில் இந்த கடிதங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு “A Thought for the Day” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்த கடிதங்கள் குறித்து ஏல நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மகாத்மா காந்தியின் இந்த கையெழுத்துப் பிரதியானது உண்மை, அகிம்சை, பிரம்மச்சரியம், உடைமை தவிர்த்தல், அச்சமின்மை, மத சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, பிரார்த்தனை, ராமநாமம், சேவை, உழைப்பு, பசி, கடமை, சுயராஜ்யம், தார்மீகப் பொறுப்பு, மௌனம், மனசாட்சி, பற்றின்மை, சுய-உணர்தல் மற்றும் இறைவனைத் தேடுதல் ஆகியவற்றைப் பற்றி பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.