திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் – செயற்குழுவில் தீர்மானம்
1 min read
An individual can hold the post of DMK District Secretary for a maximum of three terms.
22.8.2026
திமுக மாவட்ட செயலாளராக ஒருவர் அதிகபட்சம் 3 முறை பதவி வகிக்கலாம் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பாக அதிரடி முடிவுகள் தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக இளைஞர்களுக்கும் கட்சியில் ஆர்வமுடன் பணியாற்றும் அனைவருக்கும் பொறுப்புகள் கிடைக்கும் வகையில் கட்சி பதவிகளுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளராக 3 முறை மட்டுமே பதவி வகிக்கும் வகையிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
- கழகத்தின் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, கிளைக்கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக்கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
- சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரகங்களிலும், சூழலுக்கு ஏற்ப பிற மாநகராட்சிகளிலும் வட்டக்கழகங்களை வலிமைப்படுத்திட கிளைக்கழகம் அமைக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர் கிளைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே இப்பொறுப்பை வகிக்க முடியும்.
- சென்னை மாநகராட்சியின் வட்டக்கழகங்கள் சராசரியாக 10 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் சராசரியாக 5 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். மாநகர-நகர-பேரூர் வட்டக்கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
- பேரூர் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
- சென்னை மாநகராட்சியில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், பிற மாநகராட்சிகளில் பகுதிக்கழகங்கள் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும் அமையும். பகுதிக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
- நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகளைக் கொண்டிருக்கும். நகரக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 எனவும், ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என தீர்மானிக்கப்படுகிறது.
- சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.
- வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. பிரிக்கும்போது ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருப்பின் அதே வருவாய் மாவட்டத்தில் பொருத்தமான கழக மாவட்டத்துடன் மூன்றாவது தொகுதியாக இணைக்கப்படும். மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும். இனி மாநகரச் செயலாளர் என்ற பொறுப்பு இருக்காது.
- கழகத்தலைவர் 110 மாவட்டங்களை அறிவித்தவுடன், மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15 நாட்களுக்குள் ஒன்றியம்-நகரம்-பகுதி-வட்டக்க ழகங்கள் பிரிக்கப்பட வேண்டும்.
தலைமைக்கழகத்தால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதி முன்னிலையில் மீண்டும் மாவட்ட செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு, பிரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டு தலைமைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தி.மு.க. மாவட்ட செயலாளராக ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. பின்னர் அது திருத்தம் செய்யப்பட்டு 3 முறை பதவி வகிக்கலாம் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.