August 23, 2026

Seithi Saral

Tamil News Channel

வந்தே மாதரம் பாடலில் எந்த சமரசம் கிடையாது- பா.ஜ.க. தீர்மானம் நிறைவேற்றம்

1 min read

No compromise on the ‘Vande Mataram’ song – BJP passes resolution.

22/8/2026
வந்தே மாதரம் பாடலில் எந்த சமரசம் கிடையாது என்று பா.ஜ.க. இன்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

வந்தே மாதரம் பாடலை முதலில் பாடி சுதந்திர தினவிழாவை தொடங்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதற்கேற்ப, சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு தின கொண்டாட்டத்தின் பகுதியாக, பாடலின் 6 சரணங்களும் படிக்கப்பட்டன. செங்கோட்டையில் பாடப்பட்டது இது முதன்முறை என்ற சிறப்பையும் அது பெற்றது.

இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கடந்த 19-ந்தேதி கூடி, காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்தின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என முடிவு செய்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுபற்றி மத்திய மந்திரி அமித்ஷா கூறும்போது, காங்கிரசின் இந்த முடிவு, அக்கட்சியின் 1937-ம் ஆண்டு நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நோக்கில், வந்தே மாதரத்தை இரண்டு பகுதிகளாக 1937-ல் காங்கிரஸ் கட்சி, பிரித்தது. இதுவே இந்திய பிரிவினைக்கு அடித்தளமிட்டது என சமீபத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தேசவிரோதம் என்றும் பல தசாப்தங்களாக அக்கட்சி மேற்கொண்டு வரும் திருப்திப்படுத்தும் அரசியல் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில், டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில், ஒரு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. வந்தே மாதரம் பாடலின் வரலாற்று பாரம்பரியம், கவுரவம் மற்றும் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு நிறைவேறிய இந்த தீர்மானத்தின்படி, அரசியல் சவுகரியத்திற்காகவோ அல்லது அரசியல் திருப்திப்படுத்துதலுக்காகவோ வந்தே மாதரம் பாடலின் கவுரவம், பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வது எந்தவிதத்திலும் ஏற்று கொள்ள முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று பா.ஜ.க.வின் இன்றைய கூட்டத்தில், பாடலின் முதல் 2 சரணங்களை மட்டுமே பாடுவது என்ற காங்கிரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *