August 26, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண சமரச தீர்வு முகாம்

1 min read

Tenkasi: Conciliation camp to resolve pending cases.

26/8/2026
மாவட்ட சமரச மையம்,சார்பில் தென்காசி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண
நீதிமன்றங்களில் 90 நாள் சிறப்பு சமரச தீர்வு முகாம்
அக். 1ம் தேதி முதல் டிச. 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுபற்றி தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் கூறியிருப்பதாவது :-

“தேசத்திற்காக சமரசம் 3.0” என்ற இயக்கத்தின் அடிப்படையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மையத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளும் சிறப்பு முகாம் தென்காசி மாவட்ட நீதிமன்றங்களில்
அக். 1ம் தேதி முதல் டிச. 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் தமிழ்நாடு சமரச மைய வழிகாட்டுதலின்படி, “தேசத்திற்காக சமரசம் 3.0” என்ற சிறப்பு பிரசார இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் இயங்கும் சமரச மையங்களில் 90 நாட்கள் சிறப்பு சமரச தீர்வு முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் இச்சிறப்பு முகாமில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சமரசத்திற்கு உட்பட்ட உரிமையியல் மற்றும் குடும்பத் தகராறுகள், வாகன விபத்து நஷ்டஈட்டு வழக்குகள், பிரிவு 138ன் கீழான காசோலை மோசடி வழக்குகள், நுகர்வோர் மற்றும் வணிகக் கடன் தொடர்பான வழக்குகள், நில எடுப்பு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், சமரசத்திற்கு உரிய குற்றவியல் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு சமரச தீர்வு காணப்படும்.

இம்முகாமில், பயிற்சி பெற்ற வழக்கறிஞர்கள் சமரசர்கள், இருதரப்பு வழக்காடிகளுக்கும் சமரசத்தின் நன்மைகளை எடுத்துரைத்து, பிரச்சினை களுக்கு சுமூகமான முறையில் விரைந்து தீர்வு காண உதவி புரிவர். இதன் மூலம் நீதிமன்றங்களின் வழக்குச் சுமை குறைவதுடன், பொதுமக்களின் கால விரையமும் தவிர்க்கப்படும்.

எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நிலுவை வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி.ராஜவேல் மற்றும் அணைத்து நீதிபதிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விவரங்களுக்கு மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் இயங்கும் சமரச மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் இலவச உதவி எண் 15100ஐ தொடர்பு கொண்டும் ஆலோசனை பெறலாம் எனவும் மாவட்ட சமரச மையம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *