சங்கரன்கோவில் என்ஜினியர் சிங்கப்பூரில் கொலை
1 min read
Engineer from Sankarankovil murdered in Singapore.
1.9.2026
சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் மகேஷ் குமார் (வயது 30). டிப்ளமோ இன்ஜினியர். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து மகேஷ் குமார் கொலை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு விடுத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மகேஷ் குமாரின் தாயார் மாலதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இரண்டு வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த எனது மகன் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றான். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு தனது மகன் இறந்ததாக உறவினருக்கு சிங்கப்பூரிலிருந்து தகவல் கொடுத்துள்ளனர். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற தகவலை தனியார் நிறுவனம் சரியாக பதில் சொல்ல வில்லை. திருச்சி விமான நிலையத்தில் செப்டம்பர் 2-ம் தேதி நாளை புதன்கிழமை உடலை தருவதாக கூறியுள்ளனர்.
எனது மகனின் உடலுடன், மகனின் செல்போன் வழங்கினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம். எனது மகனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு தாயார் மாலதி கண்ணீர் மல்க கூறினார்
கொலை செய்யப்பட்ட மகேஷ் குமாருக்கு செலின் என்ற மனைவியும் 7 வயதில் மதிமாறன் ஐந்து வயதில் சதீஷ்மாறன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இரு மகன்களும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் மகேஷ் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.