டெங்கு தடுப்புக்காக மாணவிகள் சுடிதார் அணிய மேற்கு வங்க அரசு பரிந்துரை
1 min read
West Bengal government recommends female students wear churidars for dengue prevention.
5.9.2026
மேற்கு வங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சீருடை பாவாடைக்கு பதிலாக உடலை முழுமையாக மூடும் சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநிலத்தில் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்தில் டெங்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஸ்வஸ்த்ய பவன் தலைமையகத்தில் உயர்நில ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் சரத்வத் முகர்ஜி, கொசுக்கடியிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு பள்ளி மாணவர்கள் அனைவரும் முழுக்கை சட்டைகள் மற்றும் முழு நீள பேண்ட் அணிய பள்ளிகள் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வழக்கமாக பாவாடை (ஸ்கர்ட்) சீருடை அணியும் மாணவிகள், தங்கள் கால்களை முழுமையாக மூடும் வகையில் சல்வார் சூட்களுக்கு மாற தற்காலிகமாக விலக்கு அளிக்குமாறு பள்ளி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பகல் நேரத்திலேயே அதிகளவில் கடிக்கும் தன்மையுடையவை என்பதால், பள்ளி நேரங்களில் மாணவர்களின் கை மற்றும் கால்கள் மூடப்பட்டிருப்பது நோய்த்தொற்று அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். எனவே, அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் இந்தத் தற்காலிக மாற்றத்தை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.