அம்பையில் திருமண மண்டப உரிமையாளர்வெட்டிகொலை
1 min read
Wedding hall owner hacked to death in Ambai
12.9.2026
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் திருமண மண்டப உரிமையாளரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர் தப்பி ஓடிய மேலும் ஒருவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52) இவர் அம்பாசமுத்திரத்தில் இருந்து ஊர்காடு செல்லும் சாலையில் திருமண மண்டபம் நடத்தி வந்துள்ளார்.இவரது மனைவி சாந்தி, 10-ம் வகுப்பு படிக்கும் மகள் லட்சுமி ப்ரியாவுடன் கல்லிடைக் குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வந்தார்.
இவரது மகள் லட்சுமி ப்ரியா கல்லிடைக்குறிச்சி குத்துக்கல் தெருவில் டியூசன் படித்து வருகிறார். நேற்று இரவு மகளை அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கண்ணன் சென்றார். டியூசன் செண்டர் அருகே சென்றபோது, அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென்று கண்ணனை சுற்றிவளைத்து தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் கண்ணன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் தகவலறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஸ் பா.சாஸ்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடினர். கண்ணன் எதற்காக கொலை செய்யப்பட்டார். என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அம்பையை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 30) மற்றும் அவரது கூட்டாளியான பிரம்மதேசத்தை சேர்ந்த சூர்யா இசக்கி (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், கண்ணன் தனது தொழிலை மேம்படுத்திட வேண்டி வெங்கடேசிடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50 சவரன் நகைகள் மற்றும் 23 லட்சம் பணம் வாங்கி உள்ளார். இதில் 11 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த நிலையில் மீதமுள்ள பணம் மற்றும் நகையை கண்ணன் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சமீபத்தில் கண்ணனுக்கும்
வெங்கடேஷின் சகோதரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் நேற்று தனது கூட்டாளியுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. கைதான 2 வாலிபர்கள் மீதும் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 1 வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.