கடையம் யூனியன் அலுவலகத்தில் அதிரடி சோதனை- ஜிபே மூலம் லஞ்சம் வாங்கியது அம்பலம்
1 min read
Surprise raid by the Directorate of Vigilance and Anti-Corruption at the Kadayam Union office.
22/9/2026
தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் அலுவலகத்தில்
காண்ட்ராக்டர்களிடம் ஜி பே மூலம் 10 லட்சம் லஞ்சம் பெற்ற கடையம் யூனியன் அதிகாரிகளை – லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அங்கிருந்த காண்ட்ராக்ட் காரர்கள் வைத்திருந்த ரூபாய் 16 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துறைவாரியாக நடைபெற்று வரும் சோதனையில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் ஊழல் தொடர்பாக நாள்தோறும் பல்வேறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால் சுகர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அலிஸ் தாயம்மாள் (பொது), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி (பொது), பொறியாளர் சந்திரலேகா உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள், மற்றும் ஒப்பந்ததாரர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருடைய போன்களின் ஜிபே பணப் பரிவர்த்தனைகளும் சோதனை செய்யப்பட்டது.
அப்போது அலுவலகத்திற்கு உள்ளே வந்திருந்த 6 கான்ட்ராக்டர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் கதவை பூட்டி உள்ளே அமர வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரொக்கப் பணமாக ரூபாய் 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ஆறு காண்ட்ராக்டர்களிடமிருந்து யூனியன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவி அலுவலர்கள் பத்து லட்சத்து 200 ரூபாய் ஜிபே மூலம் லஞ்சமாக பெற்றுள்ளனர்.
கடையம் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலீஸ் தாயம்மாள் உள்ளிட்ட 5 பேரின் ஜி பே பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், கடந்த 9 மாதங்களில் காண்ட்ராக்டர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்து 200 பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையின் இறுதியில் ஒப்பந்ததாரர்கள் பலரிடமிருந்தும் அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்களின் போனுக்கு பலமுறை ஜிபே பரிவர்த்தனையின் ஊடாக பெறப்பட்ட கணக்கில் வராத சட்டவிரோதமாக லஞ்சமாக பத்து லட்சத்து இருநூறு ரூபாய் பெறப்பட்டது தெரியவந்தது. மேலும், ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 16,000 ரூபாய் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது.
இதனை அலுவலர்களின் மொபைல் போனை சோதனை செய்ததன் மூலம் அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள். மேலும் லஞ்சம் பெற்றது குறித்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் காண்ட்ராக்டர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் தென்காசி மாவட்ட அரசு துறை அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் தாலுகா அலுவலக சர்வேயர் சுந்தர்ராஜ் ஜி பே மூலம் ரூ.60 ஆயிரம் பெற்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத் தறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.