ஜெம் வீரமணி வழக்கு: ரெயில்வே தொழிலாளர் சங்க நிர்வாகி மகனுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்
1 min read
Gem Veeramani Case: ‘Look-out’ notice issued against son of railway workers’ union office-bearer.
24.9.2026
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி உள்ள ‘ஜெம்’ கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு உதவியாக செயல்பட்டது மற்றும் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து வழக்கை மறைக்க முயன்றது தொடர்பாக, ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ‘ஜெம்’ கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி (வயது 85), சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது தோழி சாந்தி (வயது 61), சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹன் (63) மற்றும் உதவியாளர் கணேசன் (55) ஆகியோரும் சிறையில் உள்ளனர். போலீசார் நடத்திய சோதனையில் வீரமணியின் ரகசிய டைரி மற்றும் அவர் சிறுமியரை வன்கொடுமை செய்த அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சிக்கின.
இந்த வீடியோக்களை சாந்தி எடுத்து வந்துள்ளார் என்பதும், அதனை வீரமணி தனது நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு அனுப்பி ரசித்ததும் விசாரணையில் அம்பலமானது. அந்த நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.
இந்த வழக்கை மூடி மறைக்க, சென்னை காவல் துறை ஆய்வாளர்கள் இருவருக்கு வீரமணி தரப்பிலிருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதற்கு அகில இந்திய ரெயில்வே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.கண்ணையாவின் மகன் பிரகாஷ் இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரகாஷுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில், அவர் இந்தியாவிற்குள் நுழைவதை தடுக்கவும், அவரை பிடிக்கவும் விமான நிலையங்களுக்கு ‘லுக்அவுட்’ அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று சிறையில் இருந்த வீரமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நேற்று காலை முதல் பெரம்பூரில் உள்ள பிரகாஷின் வீடு, ராயப்பேட்டையில் உள்ள பிரகாஷின் அலுவலகம், கோபாலபுரத்தில் உள்ள வீரமணியின் அலுவலகங்கள், தி.நகரில் உள்ள வீரமணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் செல்போன்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
கடந்த 23 ஆண்டுகளாக வீரமணியிடம் உதவியாளராக பணியாற்றிய கணேசன், வீரமணியின் அனைத்து சட்ட விரோத செயல்கள் குறித்தும் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே விசாரணை தற்போது முக்கிய புள்ளிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வரும் போலீசார், அடுத்தக்கட்டமாக லஞ்சம் பெற்ற அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் வீடியோக்களை பெற்ற நபர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.