September 28, 2026

Seithi Saral

Tamil News Channel

எஸ்ஐஆர் குறித்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்: தேர்தல் ஆணையம் விளக்கம்

1 min read

Unanimous decisions regarding the SIR: Election Commission clarifies

26.9.2026
பீகார் முதல் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி தொடர்பான உத்தரவுகள் அனைத்தும் ஒருமனதாக பிறப்பிக்கப்பட்டவையே என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாகவும், சிறப்புத் தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஞானேஷ் குமாரின் முடிவுகளுக்கு எதிராக அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போனதற்கு ஞானேஷ் குமாரே காரணம் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து தெரிவித்துள்ளதோடு, அனைத்து முடிவுகளையும் ஒன்றிணைந்தே எடுப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

‘நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணியின்போது முரண்பாடுகள் காரணமாக வாக்காளர் யாருக்கேனும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தால், அவர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) நேரில் சென்று ஆவணங்களைப் பெற்று, பின்னர் அவற்றை வாக்காளர் பதவிவு அதிகாரியின் (ஈஆர்ஓ) முடிவுக்காக ECINet-இல் பதிவேற்றுவார்கள்.

அத்தகைய நபர்களை விசாரணைக்காக அதிகாரிகள் அழைக்கத் தேவையில்லை. ஈஆர்ஓ-வால் தீர்மானிக்கப்படும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் விசாரணை நடத்தப்படும். அதுவும், ஆன்லைனில் விசாரணை நடத்த முன்னுரிமை அளிக்கப்படும். வாக்காளர் தனது சார்பாக குடும்பத்தில் வயது வந்த உறுப்பினர் ஒருவரை விசாரணையில் கலந்து கொள்ள அங்கீகரிக்கலாம்.

எஸ்ஐஆர் படிவம் 6 உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவத்தை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையின்போது மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். எஸ்ஐஆர் அல்லாத மற்ற காலங்களில் முந்தைய விதிகளின்படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும்.

மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் எஸ்ஐஆர் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான காலக்கெடு முறையே அக்.12 மற்றும் அக். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் அனைத்துக் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே விநியோகிக்கப்படும். கூட்ட நடவடிக்கைகள் குறித்த குறிப்புகள் வெளியிடப்படும்.

சமீபத்திய மாதங்களில் நாடு முழுவதும் எஸ்ஐஆர் உட்பட பல முடிவுகளை ஆணையம் எடுத்துள்ளது. பிஹாரில் தொடங்கி 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் தொடர்பான உத்தரவுகள் ஆணையத்தின் ஒருமனதான ஒப்புதலுடன் பிறக்கப்பட்டன. இது கடந்த மே 27-ம் தேதி வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த பத்திரிகைச் செய்தி வெளியிடப்படுகிறது. இதற்கு முழு ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *