தென்காசி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்ப உதவியாளர் தேர்வு
1 min read
Recruitment of Technical Assistants on a contract basis in Tenkasi District
6/10/2026
தென்காசி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையிலான தொழில் நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முக மற்றும் திறனாய்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்ய உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ், தென்காசி மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தென்காசி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் உள்ள ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ. 22,000/- வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் நபரது பணியானது மார்ச் 2027 வரை உள்ளது. மேலும், அரசின் நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப இப்பணிக்காலம் மார்ச் 2028 வரை நீட்டிக்கப்படும். தேர்வு செய்யப்படும் தொழில்நுட்ப உதவியாளர்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல், கூட்டங்களை நடத்துதல், பயிற்சி முகாம்களை ஒழுங்கமைத்தல் மற்றும் காலநிலை திட்டங்கள் தொடர்பான ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுப் பயிற்சியுடன் MS Word, MS Excel மற்றும் MS PowerPoint ஆகியவற்றில் பணிபுரியும் கணினித் திறனும் பெற்றிருக்க வேண்டும். அரசுத் துறைகளில் பணிபுரிந்த அனுபவம், தரவு மேலாண்மை (Data Entry) கோப்புப் பராமரிப்பு மற்றும் அரசு அறிக்கைகள் தயாரிப்பில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் டிசிசிஎம் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தென்காசி மாவட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தை தென்காசி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https//tenkasi.nic.in வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் சுயவிவரக் குறிப்பு (Resume/CV), கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்று, இருப்பிடச் சான்று. தட்டச்சு சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து நேரிலோ அல்லது விரைவுத் தபால் (Speed Post)
மூலமாகவோ 09.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை “மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் (DCCM), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தென்காசி மாவட்டம் – 627811” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட காலவரம்பிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தெரிவித்துள்ளார்.